தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசியாவில் வெப்பத் தாக்கத்தைக் கையாளும் புதிய முயற்சி

2 mins read
905a15f7-8118-414d-9305-8fc20cba2723
இணைப் பேராசிரியர் ஜேசன் லீ, சிங்கப்பூரில் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியின் வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், செயலாக்க நிலையத்தின் முன்னுரிமைகளை எடுத்துரைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட பலதுறை வட்டார நடுவம் ஒன்று, அதிகரிக்கும் வெப்பநிலைக்கு எதிரான மீள்திறனை வளர்த்துக்கொள்ள தென்கிழக்காசியா முழுவதுமுள்ள மக்களுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியின் வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், செயலாக்க நிலையம் என்பது அந்த நடுவத்தின் பெயர்.

வட்டாரத்தில் நிலவும் மிக அதிக வெப்பநிலை ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ள நிலையில் சுகாதாரப் பராமரிப்புத் துறையினர் மட்டும் இதைச் சமாளிக்க முடியாது என்பதால் கல்வியாளர்கள், அரசாங்கக் கொள்கைகளை வகுப்போர் உட்படப் பல்வேறு துறையினரைக் கொண்ட பேரவையை அமைக்க அது திட்டமிடுகிறது.

வெப்பம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, தொழில்முறை மருத்துவ ஊழியர்களை மட்டும் சார்ந்திருக்காமல் அத்தகைய கோளாறுகள் ஏற்படாமலே தடுப்பதற்குக் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நிலையத்தின் இணைப் பேராசிரியர் ஜேசன் லீ கூறினார்.

சிங்கப்பூரில் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார்.

வெப்பத்தால் ஏற்படும் ஒவ்வோர் உயிரிழப்பையும் தடுக்க முடியும். அதனால் குறிப்பிட்ட குழுவினருக்கு ஏற்ற தீர்வுகளை எட்டுவது அவசியம் என்றார் அவர்.

சூறாவளி போன்ற பருவநிலை நிகழ்வுகளால் ஏற்படும் பேரழிவு வெளிப்படையாகத் தெரியக்கூடியது. வெப்ப உயர்வானது அவ்வாறு வெளிப்படையாகத் தெரியாமல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்றார் இணைப் பேராசிரியர் லீ.

வெப்பமும் காற்றில் ஈரப்பதமும் இந்த வட்டாரத்துக்குப் புதியவை அல்ல. அதனால் நீண்டகாலமாகவே இதுகுறித்துத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்ட அவர், மெதுவாகச் சூடேற்றப்படும் பானை நீரில் ஒருகட்டம் வரை தாக்குப்பிடித்துப் பிறகு மாண்டுபோகும் தவளையின் நிலையுடன் அதை ஒப்பிட்டுக் கூறினார்.

ஜனவரி 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, பீச் ரோட்டில் உள்ள பார்க்ராயல் ஹோட்டலில் உலகளாவிய வெப்பத் தாக்கத் தகவல் பேரவையின் (Global Heat Health Information Network - GHHIN) முதல் தென்கிழக்காசியக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

உலகச் சுகாதார நிறுவனம், உலக வானிலை ஆய்வு அமைப்பு (WMO), அமெரிக்க தேசிய பெருங்கடல், காற்றுமண்டல நிர்வாக அமைப்பு ஆகிய மூன்றும் இணைந்து வெப்பத் தாக்க நெருக்கடியைச் சமாளிக்க ‘ஜிஜிஎச்ஐஎன்’ பேரவையை அமைத்துள்ளன.

ஆய்வாளர்கள், மனிதநேய அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள், வானிலை ஆய்வு வல்லுநர்கள் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

அந்தப் பேரவையின் தென்கிழக்காசிய நடுவமாக, 2023ஆம் ஆண்டு, தேசியப் பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியின் வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், செயலாக்க நிலையம் நியமிக்கப்பட்டது.

எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைச் சமூக உறுப்பினர்களே கண்காணித்தல், கட்டட, நகர வடிவமைப்பில் வெப்பம் தணிக்கும் அம்சங்களைச் சேர்த்தல், வெப்பத் தாக்கம் தொடர்பான ஊழியர் பாதுகாப்பு குறித்துக் கொள்கை வகுப்பாளர்களின் புரிதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் இந்த நிலையம் வேலையிடங்கள், உள்ளரங்கங்கள், நகர்ப்புறங்கள் ஆகியவற்றில் வெப்பத்தின் தாக்கம் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்