தீ விபத்துகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தவும் சமூகத்தின் தயார் நிலையை உறுதிப்படுத்தவும் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாலான் புசாரில் சனிக்கிழமை (மார்ச் 1) முதன்முறையாக நடைபெற்ற சமூக மீள்திறன் நாள் நிகழ்ச்சியில் (Jalan Besar Community Resilience Day) அவை அறிமுகம் கண்டன.
முதியோர், எளிதில் பாதிக்கப்படுவோர்க்கு ஆதரவு வழங்கவும் வட்டாரக் குடியிருப்பாளர்களின் சமூக உணர்வை வளர்க்கவும் ‘ஜாலான் புசார் தீப்பாதுகாப்பு காக்கிஸ்’ (The Jalan Besar Fire Safety Kakis) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், குடியிருப்பாளர்கள் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொண்டு முதியோர், எளிதில் பாதிக்கப்படுவோரிடையே தீப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவசரகாலத்தில் அவர்களை வெளியேற்ற உதவவும் தங்கள் பங்கை ஆற்றுவார்கள்.
நிகழ்ச்சியில், வீட்டில் தீப்பாதுகாப்பைச் சரிபார்க்கும் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மின்னிலக்க மதிப்பீட்டுக் கருவியின் மூலம் குடியிருப்பாளர்கள், வீடுகளில் தீ விபத்து ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை அடையாளம் காண்பதோடு, உரிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளையும் பெறுவர்.
புதிய திட்டங்கள், 170,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தீயணைப்பு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.
ஜாலான் புசார் குழுத்தொகுதியின் சமூக அவசரகால, ஈடுபாட்டுக் குழுக்கள் நான்கு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, குடியிருப்பாளர்கள், அடித்தள ஆலோசகர்கள், அடித்தளத் தலைவர்கள், சமூகப் பங்காளிகள் முதலியோரை ஒன்றிணைத்து, அவசரகாலத் தயார்நிலைக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் கூட்டு முயற்சியாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில், அவசரகாலப் பாதுகாப்பு, தீயணைப்புப் பாதுகாப்பு தொடர்பில் பல விளையாட்டுகள், நடவடிக்கைகள், பாவனைப் பயிற்சிகள் முதலியவை இடம்பெற்றதோடு சமூகத்தில் அவசரகாலத்தின்போது உதவியாற்றிய பொதுமக்களுக்கும் உடனடி உதவி வழங்குபவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.
தீப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் அப்பால், சமூகத்துக்குத் தனித்துவமான கம்போங் உணர்வை இம்முயற்சிகள் பிரதிபலிப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகருமான ஜோசஃபின் டியோ கூறினார்.
“முதியோர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த வட்டாரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் பரிவும் விழிப்புணர்வும் நிறைந்த சூழலைக் கட்டியெழுப்ப வாய்ப்புகளை உருவாக்குகிறோம்,” என்றார் திருமதி டியோ.
தன்னார்வலர்கள் முன்வருவதே பரிவும் மீள்திறனும் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதன் முதல் படி என்று கூறினார் கொளம் ஆயர் சமூக அவசரகால, ஈடுபாட்டுக் குழுவின் தலைவர் ராபர்ட் ரொனால்ட், 55.
“இதுபோன்ற திட்டங்களும் நிகழ்ச்சிகளும் உதவிசெய்ய முன்வருவதற்கு மேலும் பலரை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். குறிப்பாக, அடித்தள அமைப்புகளில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் அடிப்படை தீப்பாதுகாப்பு நுட்பங்கள், முதலுதவி, இதய இயக்க மீட்பு சிகிச்சை (CPR) போன்றவற்றைக் கற்றுகொண்டால் சமூகத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும்,” என்றார் அவர்.

