அனைத்து சுகாதாரத் தரவுகளையும் தேசிய பதிவகத்தில் சேர்க்க புதிய சட்டம்: ஓங் யி காங்

2 mins read
827181d2-b6b2-4f89-b9ef-fb49322718fe
சிங்கப்பூர் மக்கள்தொகை சுகாதார ஆய்வுகள் குழுவின் இருபதாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோயாளிகள் பராமரிப்பையும் தரவுப்பகிர்வையும் மேம்படுத்தும் இலக்குடன் ‘சுகாதார தகவல் மசோதா’ அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங்  தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற சிங்கப்பூர் மக்கள்தொகை சுகாதார ஆய்வுகள் குழுவின் இருபதாவது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியபோது திரு ஓங் இதனைத் தெரிவித்தார்.

தீவிரப் பராமரிப்புச் சேவையை பொறுத்தமட்டில், மருத்துவமனை சார்ந்த 90 விழுக்காட்டுப் பணிச்சுமைகளை கையாளும் அரசு மருத்துவமனைகள் தேசிய சுகாதார மின்பதிவுகளுக்கு (NEHR) பங்களித்து வருவதாகவும், எஞ்சிய 10 விழுக்காட்டினைக் கையாளும் தனியார் மருத்துவமனைகள் இன்னும் அதில் இணையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைய ‘​ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள் உட்பட 70 விழுக்காட்டு தொடக்கநிலைப் பராமரிப்பு வழங்குநர்கள் ஏற்கனவே ‘என்இஎச்ஆர்’க்கு பங்களித்து வருகின்றனர்.

“சுகாதார தகவல் மசோதா என்று குறிப்பிடப்படும் அப்புதிய சட்டம், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் சுகாதார மின்பதிவுகளை தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும்,” என்றார் திரு ஓங்.

அச்சட்டத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறிய திரு ஓங், “இதன் தொடர்பில் அண்மையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளுடன் கலந்து ஆலோசித்தோம். தேசிய சுகாதார மின்பதிவுகளுக்குப் பங்களிக்க அவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்,” என்றும் சொன்னார். 

தேசிய சுகாதார மின்பதிவுகளை விரிவாக்கம் செய்தும் மேம்படுத்தியும் வருவதாக கூறிய அவர், சுகாதாரச் சேவை வழங்கும் அனைவரும் அணுகவல்ல அந்தப் பொதுத் தளம், தரவுப்பகிர்வு மூலம் நோயாளிகளுக்கு ஆற்றல்மிகு சேவை வழங்க மிகவும் பயனுள்ளதாகத் திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள்தொகை சுகாதாரம் முக்கிய அம்சமாக உருவெடுத்து வரும் வேளையில், மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால், தரவு ஆய்வுகள், கொள்கைகள், புதிய முயற்சிகள் என எதுவும் இருக்காது என்றும் பெறப்படும் தரவுகள் அதற்கான ஆதாரமாகத் திகழும் என்றும் அவர் சுட்டினார். 

தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளித்து, நோயாளிகள் தங்களின் அத்தியாவசிய மருத்துவத் தரவைப் பகிர்வதிலிருந்து விலகுவதற்கான விருப்பம் குறித்தும் பேசிய திரு ஓங், “ஒரு சிலர் தங்கள் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களின் விருப்பத்தினை நாம் மதிக்க வேண்டும்,” என்றார்.

முன்வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுகாதாரத் தரவுத்தளம், மேம்படுத்தப்பட்ட நோயாளி பராமரிப்புக்கான சிங்கப்பூரின் முயற்சிகளில் மற்றுமொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்