அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க மக்களுக்குப் புதிய ஆதரவு கிடைக்கவுள்ளது. குவீன்ஸ்டவுனில் உள்ள வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு இலவச மளிகைப் பொருள்களை வழங்கும் இலக்குடன் ‘ஹேப்பி மார்ட்’ சமூக அங்காடி சனிக்கிழமை (ஜனவரி 4) திறக்கப்பட்டது.
‘ஹாவ் ரென் ஹாவ் ஷி’ (எச்ஆர்எச்எஸ்) லாப நோக்கமற்ற அமைப்பின் முயற்சியால் நிறுவப்பட்டுள்ள இந்த அங்காடியை தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான சான் சுன் சிங் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சான், “இந்த அங்காடியை இலவச மளிகைப் பொருள்களை வழங்கும் ஓர் கடையாக மட்டும் பார்க்கவில்லை. இது, சிங்கப்பூரில் காணப்படும் சமூக உணர்வுக்கான சாட்சி,” என்று குறிப்பிட்டார்.
அரசாங்கக் கொள்கைகள் சென்றடைய முடியாத இடைவெளிகளைக் களைவதில் சமூக அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் சான், “வரி செலுத்துவது, சட்டத்தைப் பின்பற்றுவதைக் காட்டிலும் தேவையுள்ளோருக்கு உதவும் இந்த ஒருங்கிணைந்த உணர்வே, சிங்கப்பூரை வரையறுக்கிறது,” என்றார்.
“ஹேப்பி மார்ட் அங்காடி, தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமல்ல, நாம் கொண்டிருக்கும் பண்புநலன்களை அடுத்த தலைமுறையினருக்குக் கற்பிப்பதும் பகிர்ந்துகொள்வதும் ஆகும்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
‘ஹேப்பி மார்ட்’ அங்காடி குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் எண் 49 ஸ்டர்லிங் ரோட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்கள் இந்த அங்காடியிலிருந்து இலவச மளிகைப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
முட்டை, ரொட்டி, காய்கனிகள், திசுத்தாள்கள், நூடல்ஸ், பிஸ்கட், ஹலால் பொரித்த கோழி, தெம்புரா (பொரித்த) ஃபிஷ் ஃபில்லெட் உள்ளிட்ட ஏராளமான அத்தியாவசியப் பொருள்களைப் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
பயனாளிகள் மாதம் 12 பொருள்கள் வரை வாங்கும் வகையில் அவர்களுக்கு வரவு அட்டைகள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குடியிருப்பாளர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அங்காடியில் வாங்கிக்கொள்ளலாம்.
வாழ்க்கைச் செலவின உதவி
குவீன்ஸ்டவுனில் ஏறத்தாழ 50 ஆண்டுகளாக வசித்து வரும் திருவாட்டி கிருஷ்ணவேணி கண்ணுசத்திவேல், 77, புதிய சமூக அங்காடி குறித்து தமிழ் முரசிடம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“இந்த ஆதரவுக்கு மிகவும் நன்றி. நான் 12 பொருள்களை மொத்தமாக வாங்காமல் வாரத்திற்கு நான்கு பொருள்களை வாங்க முடிவு செய்துள்ளேன். இந்த அங்காடி நான் வசிக்கும் புளோக்கிற்கு எதிரே அமைந்துள்ளது.
“பணியிலிருந்து ஓய்வுபெற்ற என்னைப் போன்ற மூத்தோருக்கு அத்தியாவசியப் பொருள்களைச் சௌகரியமாக வாங்க இந்த அங்காடி வாய்ப்பளிக்கிறது.
“இந்த ஆதரவு வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க குறிப்பிடத்தகுந்த அளவு கைகொடுக்கும்; பேருதவியாகவும் இருக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி கிருஷ்ணவேணி.
இந்நிகழ்ச்சியில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறை; சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான எரிக் சுவா, ‘எச்ஆர்எச்எஸ்’ லாப நோக்கமற்ற அமைப்பின் நிறுவனர் ஆங்சன் இங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு இங், “பணிக்குச் செல்லும் குடியிருப்பாளர்கள் தங்கள் ஓய்வு நாளில் அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்காகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் அங்காடி திறந்திருக்கும்,” என்றார்.
“சிங்கப்பூரர்களுக்கு சமூகமாக இணைந்து சேவை செய்வதற்காகவும் ஒன்றாகச் சேர்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவும் இந்த அமைப்பு இயங்குகிறது. இந்தச் செயல்களில் தங்களைக் கடப்பாட்டுடன் ஈடுபடுத்தி வரும் தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி,” என்று கூறினார் அவர்.