தெம்பனிஸ் நார்த்தில் ஏறத்தாழ 4,000 வருகையாளர்களுக்கு மேல் ஒன்றுகூடும் அளவில் புதிய பள்ளிவாசல் 2029ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும்.
மூத்த குடிமக்களுடன் குடும்பங்களுக்கும் இளையோருக்கும் ஏற்ற பற்பல வசதிகளுடன் அது வடிவமைக்கப்படும்.
தெம்பனிஸ் அவென்யு 5ல் உள்ள மஸ்ஜித் தாருல் குஃப்ரன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தபோது அப்புதிய பள்ளிவாசலின் மாதிரி வடிவத்தை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைத்தார்.
‘தெம்பனிஸ்’ என்றழைக்கப்படும் ஒருவகை உள்ளூர் மரத்தின் இலைகளைச் சார்ந்த கலை வடிவமைப்புடன், மூங்கில் விளக்கைப்போன்று அதன் கோபுரம் அமையும். அதனை இயற்கை வனப்பான மரஞ்செடிகொடிகள் சூழ்ந்திருக்கும்.
தெம்பனிஸ் நார்த் டிரைவ் 5ல் கட்டமைக்கப்படும் அப்பள்ளிவாசல் அவ்வட்டார மக்களின் ஆன்மிகத் தேவையைப் பூர்த்திசெய்யும்.
பள்ளிவாசல் கட்டமைப்பு, மென்டாக்கி நிதி (எம்பிஎம்எஃப்) எனப்படும் திட்டத்தின் உதவியுடன் கட்டப்படும் 27வது பள்ளிவாசல் இதுவாகும்.
‘அனைவருக்குமான ஒரே பள்ளிவாசல்’ என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன் எழுப்பப்படும் இந்த வழிபாட்டுத் தலம், பல தலைமுறைகளையும் கடந்து மக்களுக்குச் சேவையாற்ற விழைகிறது.
தெம்பனிஸ் நார்த்துக்கு அருகில் உள்ள மஸ்ஜித் தாருல் குஃப்ரன், பாசிர் ரிசில் உள்ள மஸ்ஜித் அல் இஸ்டிக்ஃபார் ஆகிய இரு பள்ளிவாசல்களில் திரளும் மக்கள் கூட்டத்தைப் புதிய பள்ளிவாசல் தணிக்க உதவும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது அன்றையதினம் விளக்கினார்.
“வழிபாட்டையும் கடந்து மக்கள் மனதோடு ஒருங்கிணைந்த பள்ளிவாசலாக இது அமையவேண்டும் என்பது எங்களது எண்ணம். பெற்றோர்கள் மனநிறைவுடன் பிள்ளைகளை அழைத்து வருதல், இளையோர்கள் அங்கு அமைந்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி திறன்களையும் நட்பையும் வளர்த்தல், மூத்தோர் துடிப்புடன் சமுதாயத்துடன் இணைந்திருத்தல் போன்றவற்றை நாங்கள் அதில் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் விவரித்தார்.
மருத்துவ சிகிச்சை அறை, சிறுவர்களுக்கான தனி இடம், இளையோர் கல்வி கற்றல் போன்ற நடவடிக்கைகளுக்கான பகுதி, மின்தூக்கிகள், இயல்பாக நடமாடும் தேவைகளுடைய மூத்தோர்களுக்கெனத் தடையற்ற உள்கட்டமைப்புகள் பள்ளிவாசலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
