சிங்கப்பூரில் நிலையான குளிரூட்டலை (sustainable cooling) முன்னெடுக்க ஒரு புதிய தேசிய இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளறை குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலையை 25 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாக வைத்து உபயோகிக்க பொதுமக்களையும் வர்த்தகங்களையும் ஊக்குவிக்கிறது ‘கோ 25’ இயக்கம்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றமும் இணைந்து தேசியச் சுற்றுப்புற வாரியம் மற்றும் கட்டட, கட்டுமான ஆணையத்தின் ஆதரவுடன் இதை முன்னெடுத்துள்ளன.
சங்காட் தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெற்ற ‘பசுமையாவோம் எஸ்ஜி 2025’ தொடக்க நிகழ்ச்சியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் இதை அறிவித்தார்.
நிலைத்தன்மையான, செழுமையான சிங்கப்பூரை நோக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை சிங்கப்பூரர்களிடையே ஊக்குவிக்கும் ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கம், தனது மூன்றாம் பகுதியில் இவ்வாண்டு மே 16ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதிவரை இடம்பெறும்.
சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 400 பங்காளிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர் 900க்கும் அதிகமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார். இவருடன் டாக்டர் ஏமி கோரும் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சங்காட் தொடக்கப் பள்ளி மாணவர்களும் சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றம், ‘கேபிட்டலேண்ட்’ உள்ளிட்ட 3பி கூட்டாளர்களும் அமைத்திருந்த நிலைத்தன்மை சார்ந்த கண்காட்சிகளை மூன்று தரப்பினரும் பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மாணவர்களில் நிலைத்தன்மை பழக்கங்களை வளர்க்கும் நோக்கில், சங்காட் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பசுமை மையத்தையும் (Eco Hub) அதிபர் தர்மன் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
இத்துடன், ‘எஸ்ஜி60 பசுமையாவோம் எஸ்ஜி’ என்ற தலைப்பில் சிங்கப்பூரின் 60 ஆண்டுகால சுற்றுச்சூழல் பயணத்தைச் சித்திரிக்கும் புதிய மின்னூல் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இப்புத்தகத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரங்களை வடிவமைக்க சங்காட் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உதவியுள்ளனர்.
புதிய ‘கோ 25’ இயக்கத்தைப் பற்றித் தமது உரையில் விவரித்துப் பேசிய டாக்டர் கோர், “சிங்கப்பூரின் மொத்த கரிம உமிழ்வுகளில் கட்டடங்கள் 20 விழுக்காடுக்கும் அதிகமாக பங்காற்றுகின்றன. இதற்கு முக்கிய காரணமாகக் குளிர்சாதன வசதிகள் இருந்து வருகின்றன,” என்றார்.
தேவையைவிட அதிகமாக குளிரூட்டுவது எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதோடு, நகர வெப்பத் தீவு (urban heat island effect) விளைவையும் மேலும் தீவிரமாக்குகிறது என்று குறிப்பிட்ட அவர், இதனால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் சுழற்சி உருவாகுகிறது என்று கூறினார்.
அலுவலகங்களில் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலையை 23 டிகிரி செல்சியசிலிருந்து 25 டிகிரி செல்சியசுக்கு உயர்த்தினால், வசதியில் எந்தவிதத்திலும் குறைவு ஏற்படாமல், 12 விழுக்காடு வரை எரிசக்தியைச் சேமிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்த்தப்பட்ட வெப்பநிலைக்கு ஏற்ற உடைகள் அணிதல், விசிறிகளைப் பயன்படுத்தல், சமூக ஊடகங்களில் இயக்கத்தைப் பற்றிப் பகிர்தல் முதலியவை ‘கோ 25’ உறுதிமொழியை எடுப்பவர்கள் பின்பற்றக்கூடிய செயல்முறைகளில் சிலவாகும்.
2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சிறந்த நடைமுறைகள், பயனுள்ள ஆலோசனைகள், ‘கோ 25’ வழிகாட்டுதல்கள் முதலியவற்றை விளக்கும் புதிய தொழில் வழிகாட்டி வெளியிடப்படும்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒவ்வொரு சிங்கப்பூரரின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்திய டாக்டர் கோர், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பசுமைச் சமூக முயற்சிகளைப் பாராட்டினார். கடந்த ஆண்டுகளின் ‘பசுமையாவோம் எஸ்ஜி’ இயக்கங்கள் மக்களின் நடத்தையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதை எடுத்துக்காட்டினார்.
“நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே, அரசாங்க கட்டடங்களில் 95 விழுக்காடுக்கும் அதிகமானவை ‘கோ 25’ இயக்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறினார்.
“இது தொழில்துறை தரங்களைப் பற்றியது மட்டுமல்ல. நமது தனிப்பட்ட வாழ்க்கைப் பழக்கங்களில் சிறிய மாற்றங்களை நாம் அனைவரும் செய்வதன்மூலம் ஒரு தேசிய இயக்கத்தை ஆதரிக்க முடியும்,” என்றார் திரு பே.

