தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்தால் பாதிக்கப்படும் சிங்கப்பூர்ப் பயனர்களைப் பாதுகாக்க செயலி விநியோகச் சேவைகளுக்கான இணையப் பாதுகாப்பு நெறிமுறையைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) அறிமுகப்படுத்துகிறது. இந்த ஆண்டு (2025) மார்ச் 31ஆம் தேதி இது நடப்புக்கு வரும்.
புதிய ‘செயலி விநியோகச் சேவைகளுக்கான இணையப் பாதுகாப்பு நெறிமுறை’ (Code of Practice for Online Safety – App Distribution Services) குறித்துப் புதன்கிழமை (ஜனவரி 15) மாலை வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் தெரிவித்தது. புதிய நெறிமுறையின்படி, ஒலி/ஒளிபரப்புச் சட்டம் 1994, பிரிவு 45K(1)ன்கீழ் வரையறுக்கப்படும் செயலி விநியோகச் சேவைகள் (ஏடிஎஸ்), சில முக்கிய விதிகளைப் பின்பற்றவேண்டும்.
செயலி விநியோகச் சேவைகளான ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோர், ஹுவாவே ஆப் கேலரி, மைக்ரோசாஃப்ட் ஸ்டோர், சாம்சுங் கேலக்சி ஸ்டோர் ஆகியவற்றிடம் இணைய அமைப்பு அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆணையம் கோரும்.
மார்ச் 31 முதல், 18 வயதுக்குட்பட்ட இளம் பயனர்கள் தங்கள் வயதுக்குப் பொருந்தாத உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்வதைச் செயலி விநியோக அமைப்புகள் தடுக்கவேண்டும். ‘டேட்டிங்’ செயலிகள், வயது வந்தோருக்கான இணைய விளையாட்டுகள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.
இணைய விளையாட்டுகள் உட்பட இணைய உள்ளடக்கத்திற்கான சந்தைத் தளங்கள் மற்றும் மின்னிலக்கச் சாதனங்களின் செயலிகளை அணுகுவதற்கான முக்கிய நுழைவாயில்கள் செயலி விநியோகச் சேவைகள் (ஏடிஎஸ்) என்பதை அங்கீகரிப்பதாக ஆணையம் சுட்டியது.
மேலும், சிறார்கள் உட்பட அதிகமான மக்கள் கைப்பேசிச் சாதனங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர். அவர்கள் செயலிகளை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய ‘ஏடிஎஸ்’ஐ அணுகுகின்றனர். இதனால் சிறார்களின் வயதுக்குப் பொருந்தாத உள்ளடக்கம் உட்பட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் காண நேரும் அபாயம் அதிகரித்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு பாலியல், வன்முறை, தற்கொலை, இணையக் கேலி, பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பது, சுயதீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உள்ளிட்டவை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் வகைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, சிங்கப்பூர்ப் பயனர்களுக்கான இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் அடுத்த கட்டமாக, செயலி விநியோகச் சேவைகளை ஒலி/ஒளிபரப்புச் சட்டத்தின்கீழ் மற்றொரு வகை இணையத் தொடர்புச் சேவைகளாகச் சேர்த்துள்ளதாக ஆணையம் விவரித்தது. இந்தச் செயல்திட்டம் சிங்கப்பூர்ப் பயனர்கள் மோசமான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அணுகுவதை முடக்க ‘ஏடிஎஸ்’ஐ வழிநடத்த ஆணையத்தை அனுமதிக்கும்.
இதனிடையே, ஆணையத்தின் செயலி விநியோகச் சேவைகளுக்கான புதிய பயன்பாட்டு நெறிமுறை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ.
தொடர்புடைய செய்திகள்
“பெற்றோர் கட்டுப்பாடு எனும் கூறு, வயதுக்கேற்ப பொருத்தமான உள்ளடக்கக் கட்டுப்பாடு, தீங்கைச் சுட்டிக்காட்டும் கருவிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயலி விநியோக அமைப்புகள் இனி செயல்படுத்த வேண்டியிருக்கும்.
“இதனால், சிறார் வயதுக்கேற்ற உள்ளடக்கத்தை கற்றுக்கொண்டு, செழித்து வளர முடியும். இணையப் பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்கும் எந்த அதிசயப் பொருளும் இல்லை என்றாலும், இணையத் தீங்குகளுக்கு எதிராக நமது பாதுகாப்பை வலுப்படுத்தச் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பெற்றோரை ஆயத்தப்படுத்துவது மூலமும் இணைந்து செயல்படுவதன் மூலமும் சிறார்கள் நம்பிக்கையுடன் வளரக்கூடிய பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை உருவாக்க முடியும்,” என்றார் திருவாட்டி டியோ.