புதிய தனியார் வீட்டு விற்பனை குறைந்தது

2 mins read
7437f105-79fd-4876-be37-5d042db142d7
புளூம்ஸ்பரி ரெசிடன்சஸ் திட்டத்தின் சித்திரிப்பு. - படம்: bloomsburyresidence.com.sg

கடந்த ஏப்ரல் மாதம் சொத்து மேம்பாட்டாளர்கள் 663 புதிய தனியார் வீடுகளை விற்றனர்.

இந்த எண்ணிக்கை, மார்ச் மாதம் பதிவானதைக் காட்டிலும் ஒன்பது விழுக்காடு குறைவு. அதேவேளை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 120 விழுக்காடு அதிகம். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 301 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.

நகர மறுசீரமைப்பு ஆணையம் வியாழக்கிழமை (மே 15) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பயனீட்டாளர்களிடையே வாங்கும் போக்கு பாதிக்கப்பட்டுள்ளது; அதனால் தலைதூக்கியுள்ள நிலையற்ற பொருளியல் சூழல் மாத அடிப்படையில் தனியார் வீட்டு விற்பனை குறைந்ததற்குக் காரணம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனினும், உலகளவில் நிலையற்றச் சூழல் நிலவினாலும் வீட்டுச் சந்தை தொடர்ந்து நிலையாக இருக்கிறது என ஈஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க்கஸ் சூ கூறியுள்ளார்.

மத்தியப் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்களில் சென்ற மாதம் இரண்டு கூட்டுரிமை வீட்டுத் திட்டங்கள் விற்பனைக்கு விடப்பட்டது தனியார் வீட்டு விற்பனைக்கு மெருகூட்டின. அவை, மீடியா சர்க்கல் வட்டாரத்தில் உள்ள புளூம்ஸ்பரி ரெசிடன்சஸ், மரினா சவுத்தில் உள்ள ஒன் மரினா கார்டன்ஸ் ஆகியவை ஆகும்.

ஏப்ரலில் இடம்பெற்ற வீட்டு விற்பனையில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியை அந்த இரு திட்டங்களில் விற்கப்பட்ட வீடுகள் வகித்தன.

பெரிய அளவிலான சொகுசு வீடுகளைக் கொண்ட 21 ஆண்டர்சன் (21 Anderson) திட்டத்தில் இடம்பெறும் வீடுகளில் மூன்று, சென்ற மாதம் மொத்தமாக 60 மில்லியன் வெள்ளிக்கும் அதிக தொகைக்கு விற்கப்பட்டதாக ஹட்டன்ஸ் ஏ‌ஷியா நிறுவனத்தின் தரவு ஆய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் லீ செ டெக் தெரிவித்தார்.

எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளையும் சேர்த்து ஏப்ரலில் 759 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. அம்மாதம் 1,344 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்