புதிய பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) முதல் சேவையாற்றத் தொடங்கியுள்ளது.
இந்தப் புதிய நிலையத்தால், வடக்கு-கிழக்கு பாதையில் குறைந்த காத்திருப்பு நேரத்தில் அதிக ரயில்கள் செல்ல அனுமதிப்பதால் உச்ச நேரத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்துள்ளார்.
22 கிலோ மீட்டர் வடக்கு-கிழக்கு ரயில் பாதையின் புதிய முனைய நிலையம் பொங்கோல் மின்னிலக்க மாவட்டம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (எஸ்ஐடி) பொங்கோல் வளாகம், வரவிருக்கும் பொங்கோல் கோஸ்ட் மால் ஆகியவற்றிற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு சேவையாற்றும்.
புதிய நிலையத்தால், அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் நகர மையத்திற்குச் செல்லும் நேரத்தை கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் குறைக்கும். உதாரணமாக, பொங்கோல் நார்த்திலிருந்து ஊட்ரம் பார்க் செல்ல இனிமேல் 45 நிமிடங்கள்தான் ஆகும். முன்னர் இது 60 நிமிடங்களாக இருந்தது.
பொங்கோல் கோஸ்ட் நிலையத்திற்கு இரு நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று நியூ பொங்கோல் சாலை, மற்றது பொங்கோல் மின்னிலக்க மாவட்டத்திற்குள் உள்ளது.
நிலையத்திலிருந்து அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள், டாக்சி நிறுத்தங்கள், பயணிகளை இறக்கி விடும் - ஏற்றி விடும் இடங்களுக்கு கூரையுடன் இணைப்புப் பாதைகள் உள்ளன. ரயில் நிலைய வாசலில் உள்ள இரு சைக்கிள் நிறுத்தும் இடங்களில் ஏறக்குறைய 300 சைக்கிள்களை நிறுத்தும் வசதியுள்ளது.
தற்போதுள்ள பொங்கோல் நிலையத்திலிருந்து 1.6 கி. மீ. நீட்டிப்பான பொங்கோல் கோஸ்ட் திறக்கப்படுவதால், வடக்கு-கிழக்கு ரயில் பாதையிலுள்ள மொத்த நிலையங்களின் எண்ணிக்கை 17 ஆகிறது. வடக்கு-கிழக்கு ரயில் பாதையிலுள்ள ஒரு நிலையத்திலிருந்து 10 நிமிட நடைக்குள் 200,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
வடக்கு-கிழக்கு ரயில் பாதை, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ஆகியவை ஒட்டுமொத்த வடகிழக்கு வட்டாரத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய அமைச்சர் சீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மூத்த அமைச்சரும் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டியோ சீ ஹியன் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) காலை நடைபெற்ற நிலையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
புதிய நிலையம் “பொங்கோலை, சிங்கப்பூரின் மற்ற பகுதிகளுக்கு அருகில் கொண்டு வருகிறது”, என்று அவர் கூறினார், புதிய பேருந்து சேவைகள், பொங்கோல் வடக்கு அவென்யூ போன்ற புதிய சாலைகள் உள்பட குடியிருப்பாளர்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்கான பிற முயற்சிகளையும் அவர் சுட்டினார்.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ, கரிம வெளியீட்டைக் (carbon emissions) குறைக்கும் விளக்குகள், மின்தூக்கி உள்ளிட்ட நிலையத்தின் நீடித்த நிலைத்தன்மையான அம்சங்களையும் எடுத்துரைத்தார்.
இந்த அம்சங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,000 டன் கரிம வெளியீட்டைக் குறைக்கும். இது 500 நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் பயன்படுத்தும் எரிசக்தியிலிருந்து வெளியேறும் கரிமத்துக்குச் சமம் என்று அவர் குறிப்பிட்டார்.
பொது நிகழ்ச்சிகளுக்கான இடவசதியுடன் கூடிய முதல் நிலையம்
நிலப் போக்குவரத்து ஆணையம் வடிவமைத்த பொங்கோல் கோஸ்ட் நிலையத்தின் வாயிலில் உள்ள பொது இடத்தில் நிகழ்ச்சிகள், சமூக நிகழ்வுகளை நடத்தலாம். இத்தகைய வசதியைக் கொண்ட முதல் ரயில் நிலையம் இது.
நிலையத்தை வடிவமைக்க நான்கு ஆண்டுகளும், கொவிட்-19 தொற்றுப் பரவாலால் ஏற்பட்ட தாமதம் உள்பட கட்டுவதற்கு ஆறு ஆண்டுகளும் ஆனது.
வரும் 2032ல் தயாராகவிருக்கும் குறுக்குத் தீவு ரயில் பாதை-பொங்கோல் நீட்டிப்பை குடியிருப்பாளர்கள் எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட திரு சீ, 20 ஆண்டுகளுக்கு முன் வடக்கு-கிழக்கு ரயில் பாதை நிறைவடைவதற்கு முன்பாகவே, பொங்கோல் நிலையத்தில் கூடுதல் ரயில் பாதையுடன் முனையத்துக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
இது சிங்கப்பூரின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டின் நீண்டகால திட்டமிடலைக் காட்டுவதை அவர் குறிப்பிட்டார்.