உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்குப் புதிய விதிமுறை

உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்குப் புதிய விதிமுறை

2 mins read
c6137f4e-4711-4262-adf9-abcc7968b269
வர்த்தகக் கடன்களைப் பெறுவோருக்கு இந்த விதிமுறை பொருந்தாது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் அத்தகைய கடன் பெறுவோருக்கும் புதிய விதிமுறையை சட்ட அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் பிணையற்ற அவசரக் கடன்களை உரிமம் பெற்ற கடன் நிறுவனங்களிடம் இருந்து பெறுவோர் கட்டாயமாக மூன்று நாள்களுக்கு கடன் குறித்து சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் வழங்கப்படும். இந்த விதி வர்த்தகக் கடன்களுக்குப் பொருந்தாது.

அந்த மூன்று நாள் அவகாசம் வார இறுதிகளையும் பொது விடுமுறைகளையும் தவிர்த்து வழங்கப்படும்.

அந்த மூன்று நாள்களில் கடன் வாங்கியோர் குறைந்த அளவிலான நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்தி வாங்கிய கடனை ரத்து செய்து கொள்ளமுடியும்.

தற்போதைய விதிகளின்படி, ஒருவர் வாங்கவிருந்த கடனை ரத்து செய்யும்போது அந்த முழுக் கடன் தொகையை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட ஒப்புதல் கட்டணத்தையும் வட்டி ஏதேனும் இருந்தால் அதனையும் நிறுவனங்கள் வசூலிக்க அனுமதி உள்ளது.

புதிய கட்டாய மூன்று நாள் அவகாசத்தில் ஒருவர் கடனை ரத்து செய்யும்போது உரிமம் பெற்ற கடன் நிறுவனங்கள் ஒப்புதல் கட்டணத்தில் ஒரு சிறு பங்கை மட்டுமே நிபந்தனைகளுடன் வைத்துக்கொள்ளமுடியும். அவர்கள் அக்கடனுக்கு வழங்கிய நிர்வாகச் சேவைக்கான செலவாக அது எடுத்துக்கொள்ளப்படும்.

கடன் வழங்கும் நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் நிபுணத்துவ அமைப்பான சிங்கப்பூர் கடன் சங்கத்தின் ஆலோசனையோடு இந்த மூன்றுநாள் அவகாசத்தை மேம்படுத்தியதாக சட்ட அமைச்சு தெரிவித்தது.

அவர்களது முடிவை அவசரத்தில் எடுத்துவிட்டார்களா என்று ஆலோசிக்க இதன்வழியாக கடன் தேவைப்படுவோருக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. அதேவேளையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் அவர்களது சேவைக்கான கட்டணங்களைப் பெறவும் விதி வகை செய்கிறது. எனவே இரு தரப்பினருக்கும் இடையே சமநிலையை எற்படுத்த இது உதவும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

உதாரணமாக $5,000 வரைக்குமான கடனுக்கு கடன் நிறுவனங்கள் அதிகபட்சமாக $50 நிர்வாகக் கட்டணமாகப் பெறலாம். $5,000க்கும் மேற்பட்டக் கடன் தொகைக்கு 3.5 விழுக்காடு தொகையை நிறுவனங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம்.

கடன் நிறுவனங்கள் அந்த இரண்டு வகை கடன்களிலும் அவை ரத்து செய்யப்படும்போது ஒப்புதல் கட்டணத்தை விட அதிகமாக சேவைக் கட்டணத்தைப் பெறமுடியாது.

குறிப்புச் சொற்கள்
கடன்கடன் தவணைசட்டத்துறை அமைச்சர்புதிய சட்டம்சட்டம்அமைச்சுபுதிய சட்டத்தின்கீழ் முதல் தண்டனைவிதிமுறைஅறிமுகத் திட்டம்