கடல்மட்ட உயர்வைத் தடுக்கப் புதிய விதிமுறை: கடலோர நில உரிமையாளர்களுக்குக் கெடு

கடல்மட்ட உயர்வைத் தடுக்கப் புதிய விதிமுறை: கடலோர நில உரிமையாளர்களுக்குக் கெடு

2 mins read
47a6f9dd-f9b3-46ad-902e-58d91f59fc0b
சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார உச்சநிலை மாநாட்டில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, புதிய ‘கடலோரப் பாதுகாப்பு விதிமுறை’ குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரில் கடல்மட்ட உயர்வாலும் வெள்ளத்தாலும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், கடலோர நில உரிமையாளர்களுக்கான புதிய வழிகாட்டி விதிமுறை கையேடு புதன்கிழமையன்று (ஜூன் 17) வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார உச்சநிலை மாநாட்டில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, புதிய ‘கடலோரப் பாதுகாப்பு விதிமுறை’ குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

“கடல்மட்ட அதிகரிப்பு தொடர்பாகப் புதிய கண்டுபிடிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து அதன்படி விதிமுறைகள் புதுப்பிக்கப்படும்,” என்றார் அமைச்சர் ஃபூ.

இதன்படி, 2028ஆம் ஆண்டு முதல், குறைந்தது 30 ஆண்டுகள் குத்தகைக்காலம் எஞ்சியுள்ள கடலோர நில உரிமையாளர்கள் அனைவரும், 2150ஆம் ஆண்டிற்குள் ஏற்படக்கூடிய 2.15 மீட்டர் கடல்மட்ட உயர்வைத் தாங்கக்கூடிய பாதுகாப்பு அரண்களை அமைக்கத் திட்டமிட வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் குறைவான குத்தகைக்காலம் கொண்டவர்கள், 2050ஆம் ஆண்டின் கணிப்பான 0.7 மீட்டர் கடல்மட்ட உயர்வை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் கடலோரப் பகுதியைத் தயார் செய்ய வேண்டும்.

சிங்கப்பூரின் 70 விழுக்காடு கடலோர நிலங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை என்பதால் பெரும்பாலான பாதுகாப்பு அரண்களை அரசாங்கமே அமைக்கும். எஞ்சிய 30 விழுக்காடு தனியார் நிலங்களில் பெரும்பாலானவை கப்பல் கட்டும் தளங்கள், துறைமுகங்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த தொழிற்சாலைகளாகும்.

கடலோரப் பாதுகாப்பு அரண்கள் 120 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் வகையில் தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட வேண்டும் என்றும் நில உரிமையாளர்கள் தங்கள் பராமரிப்புப் பணிகள் குறித்து பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்ற தவறினால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
கடல்மட்டம்விதிமுறைபாதுகாப்புகிரேஸ் ஃபூ