உடற்பிடிப்பு நிலையங்களுக்கான புதிய விதிமுறைகள் டிசம்பர் 1ல் நடப்புக்கு வரும்

உடற்பிடிப்பு நிலையங்களுக்கான புதிய விதிமுறைகள் டிசம்பர் 1ல் நடப்புக்கு வரும்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 8:24 pm

2 mins read

திறந்தவெளி அமைப்பிலான உடற்பிடிப்பு (மசாஜ்) நிலையங்கள் உரிமம் பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை டிசம்பர் 1 முதல் நடப்புக்கு வருகிறது.

அத்துடன், காவல்துறை வழங்கிய சுவரொட்டிகளை அனைத்து உடற்பிடிப்பு நிலையங்களும் தங்களின் முன்பகுதியில் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதும் அந்தத் தேதியில் அமலுக்கு வருகிறது.

முதன்முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தற்போது செயல்பட்டு வரும் திறந்தவெளி அமைப்பிலான உடற்பிடிப்பு நிலையங்கள் புதிய விதிமுறைகளுக்கு மாற ஓராண்டு அவகாசம் வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர் காவல்துறை வியாழக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தது.

புதிய விதிமுறைகளின்கீழ், திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களுக்கு இனி உரிமத்திலிருந்து விலக்கு அளிக்கப்படாது. அவை புதிய ‘பிரிவு 3’ உரிமத்தைப் பெற வேண்டும்.

“திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையத்தை நடத்த விரும்பும் எவரும் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு, நிலையத்தை நடத்த தகுதியானவர்களா என்பதற்கான மதிப்பீட்டு ஆய்வுக்கு அவர்கள் உட்பட வேண்டும்,” என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“தற்போது செயல்பட்டு வரும், புதிய திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோர், தங்கள் நிலையம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடம் அல்லது தனியார் வளாகத்தில் இயங்குகிறது என்பதற்கேற்ப அனுமதி பெற வேண்டும்.

“அந்த நிலப் பயன்பாட்டு ஆணையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அல்லது நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமிருந்து பெற வேண்டும்,” என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயங்கி வரும் திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்கள் புதிய நடைமுறைக்கு மாற 2026 டிசம்பர் 1 முதல் 2027 நவம்பர் 30 வரை ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் அவை தொடர்ந்து செயல்படலாம். ஆனால் 2027 நவம்பர் 30க்குள் பிரிவு 3 உரிமத்தையும் தேவையான ஊழியர் ஒப்புதல்களையும் அவை பெற வேண்டும்; இல்லையெனில் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், நிலையங்களை நடத்துவோர் திறந்தவெளி உடற்பிடிப்பு நிலையங்களுக்கான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் எந்நேரமும் தடையின்றித் தெளிவாகப் பார்க்கும் வகையில் உடற்பிடிப்புச் சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

ரகசியமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ உடற்பிடிப்புச் சேவைகளை வழங்க வழிவகுக்கும் தனி அறைகள், தடுப்புகள், சிறிய அறைகள், திரைச்சீலைகள் அல்லது பிற அமைப்புகள் அந்த வளாகத்தில் இருக்கக்கூடாது என்பன புதிய விதிமுறைகள்.

குறிப்புச் சொற்கள்