சிங்கப்பூருக்குச் சொந்தமான நீர்ப்பகுதிகளில் ஏற்படும் தீச்சம்பவங்கள் உள்ளிட்ட அவசர நடிவடிக்கை தேவைப்படும் சம்பவங்களைக் கையாள புதிய கப்பல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் டிஸ்னி குரூஸ் லைன் (Disney Cruise Line) போன்ற பெரிய கப்பல்கள் இங்கு வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் புதிய மீட்புக் கப்பல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
புதிய 38 மீட்டர் நீளம்கொண்ட புளூ டால்ஃபின் கப்பல் வெஸ்ட் கோஸ்ட் மரின் தீயணைப்பு நிலையத்தில் இருக்கும். வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தக் கப்பல் பணியில் ஈடுபடுத்தப்படும்.
புளூ டால்ஃபின் ஓர் இரண்டாம் தலைமுறை மீட்புக் கப்பலாகும். இதற்கு முந்தைய வடிவமான ரெட் டால்ஃபினைவிட இதன் நீளம் மூன்று மீட்டர் அதிகம்.
தீச்சம்பவங்கள், மீட்புப் பணிகள், ரசாயனம் தொடர்பான சம்பவங்கள் போன்ற அவசர நடவடிக்கை தேவைப்படும் சம்பவங்களைக் கையாளும் முதன்மைக் கப்பல் இது.
கூடுதல் பரப்பளவைக் கொண்ட இக்கப்பலில் ஹெலிகாப்டர் நிற்பதற்கான பகுதி உள்ளது. அது, பாதிக்கப்பட்டவர்களை சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஹெலிகாப்டர்களில் வெளியேற்ற வகைசெய்யும்.
புளூ டால்ஃபின் கப்பலை, எச்டிஎக்ஸ் எனும் உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்), தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (டிஎஸ்டிஏ), பெங்குவின் ஷிப்யார்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை இந்த புளூ டால்ஃபின் கப்பலைக் கட்டியுள்ளன. இக்கப்பல் 30 நாட் வரையிலான வேகத்தில் போகக்கூடியது, இதில் உட்காரவைத்தபடி பாதிக்கப்பட்ட 30 பேர் வரை ஏற்றிச் செல்லலாம்.
ரெட் டால்ஃபின் கப்பலில் இடம்பெறாத மற்றோர் அம்சமான ஒருங்கிணைக்கப்பட்ட தளபத்திய முகவையும் புளூ டால்ஃபினில் உள்ளது. கப்பலில் உள்ள கேமராக்கள், உணர்க்கருவிகள் உள்ளிட்டவற்றிலிருந்து தகவல் சேகரித்து அவசர நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
புளூ டால்ஃபின் கப்பலில் கேமராக்கள் கூடுதல் தெளிவான காணொளிகளையும் படங்களையும் பதிவுசெய்யக்கூடியவை. அதோடு, தேடல், மீட்புப் பணிகளின்போது தேடப்படுவோரை அடையாளம் காணப் பணியாளர்களுக்கு உதவும் கேமராக்களில் காணொளி ஆய்வு அம்சம் (video analytics) உள்ளது.