சிறப்புத் தேவையுடைய இளம் பிள்ளைகளைக் கொண்ட டெக் கீ தொகுதியில் வசிக்கும் குடும்பங்கள் இரண்டு புதிய திட்டங்களின் மூலம் ஆதரவைப் பெறும்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், பாலர்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு ஓர் ஆதரவு கட்டமைப்பை அறிவித்தார். இத்திட்டம் அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுக்கிறது.
கூடுதல் வழிகாட்டுதல், பயிற்சி அல்லது செறிவூட்டல் தேவைப்படும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான டெக் கீ பாலர்பள்ளி கல்வி உதவி நிதியையும் திரு லீ தொடங்கி வைத்தார்.
இந்தக் கல்வி உதவித்தொகை அவர்களுக்கு சில உதவிகளை வழங்க முடியும். இதனால் அவர்கள் தேவையான ஆதரவைப் பெற முடியும். மேலும் அவர்களின் அதிகபட்ச திறனை மேம்படுத்த முடியும்,” என்றார் திரு லீ.
டெக் கீயில் ஏழு நடத்துநர்களையும் 13 முன்பள்ளி மையங்களையும் ஒன்றிணைக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட டெக் கீ பாலர்பள்ளி கட்டமைப்பு பற்றி தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மூத்த அமைச்சர் பேசினார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பாலர்பள்ளி மாணவர்கள், குடும்பங்கள், கல்வியாளர்கள் என சுமார் 2,000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அல்-முட்டாக்கின் பள்ளிவாசல் பாலர்பள்ளி, கல்வி அமைச்சின் பாலர்பள்ளி@அங் மோ கியோ, என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பசின் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், மை வோர்ல்ட்@அங் மோ கியோ சென்ட்ரல், பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ், டெக் கீயில் உள்ள சன்ஃப்ளவர் பாலர்பள்ளி, சூப்பர் டேலன்ட் சைல்டுகேர்@அங் மோ கியோ ஆகியவையே அந்த ஏழு பாலர்பள்ளி நடத்துநர்கள்.
கல்வி உதவி நிதிக்கான தகுதி அளவுகோல்கள், விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றோருடன் பகிரப்படும் என்று பாலர்பள்ளி கட்டமைப்பு ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பாலர்பள்ளி கட்டமைப்பின் தொடக்கமானது, டெக் கீ தொகுதியில் பாலர்பருவக் கல்வியை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று அந்தக் கட்டமைப்பு கூறியது.
சமூக பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது, பாலர்பள்ளி பிள்ளைகளுடன் கூடிய குடும்பங்களை சமூகத்திற்குள் ஒன்று சேர்ப்பது, சிறு பிள்ளைகளுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துவது ஆகியவற்றை பாலர்பள்ளி கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.