தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகங்களுக்கு உதவும் புதிய பொருளியல் மீள்திறன் பணிக்குழு

2 mins read
891b5131-94e6-45bd-a323-a406a50b56bc
சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்குத் தோள்கொடுக்க அந்தப் பணிக்குழு மூன்று குழுக்களாகச் செயல்படவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக அளவில் பொருளியல் நெருக்கடி தலைதூக்கிவரும் வேளையில் சிங்கப்பூர் வர்த்தகங்களுக்குக் கைகொடுக்க அரசாங்கம் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவை அறிமுகம் செய்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்குத் தோள்கொடுக்க அந்தப் பணிக்குழு மூன்று குழுக்களாகச் செயல்படவிருக்கிறது.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் புதன்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அரசாங்கம், வர்த்தகங்கள், ஊழியர்கள் ஆகிய தரப்புகளுக்கு இடையிலான மூவழித் தொடர்பை அமைப்பதில் முதல் குழு கவனம் செலுத்தும். வர்த்தகங்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றிய அண்மைய தகவல்களும் மதிப்பீடுகளும் அவற்றிடம் பகிர்ந்துகொள்ளப்படும்.

சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் லிம் மிங் யான், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோர் அதை வழிநடத்துவர்.

எத்தனை வர்த்தகங்களை அதில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முடிந்த அளவு அனைத்தையும் உள்ளடக்க விரும்புகிறோம்,” என்றார் திருவாட்டி டியோ.

தற்போது நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் 50 விழுக்காட்டு வரித் தள்ளுபடி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை ஆதரவுத் திட்டம் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

நிறுவனங்களிடமிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மறுஆய்வு செய்யப்பட்டு உதவி வழங்கப்படும். இது இரண்டாம் குழுவின் பொறுப்பாகும். ஊழியரணித் தலைவர் இங் சீ மெங் இரண்டாம் குழுவை வழிநடத்துவார்.

“இந்த நிச்சயமற்ற சூழலில் திறனாளர்களைத் தக்கவைக்க ஆட்குறைப்பு செய்வதற்குப் பதிலாக நிறுவனங்கள் இன்னும் நீக்குப்போக்கான அணுகுமுறையைக் கையாளும்,” என்று நம்புவதாகத் திரு இங் சொன்னார்.

திரு இங்குடன் இணைந்து இரண்டாம் குழுவை வழிநடத்தவிருக்கும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங், “உற்பத்தி, மொத்த விற்பனை, போக்குவரத்து, தளவாடங்கள், நிதி ஆகிய துறைகள் நிச்சயமற்ற சூழலால் அதிகம் பாதிக்கப்படும்,” என்றார். இத்துறைகளில் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இடைக்காலத்துக்கும் நீண்டகாலத்துக்குமான உத்திகள்மூலம் சிங்கப்பூரின் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்துவது மூன்றாம் குழுவின் முயற்சி.

ஒரே நோக்கம் கொண்ட மற்ற நாடுகளின் வர்த்தகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, பலதரப்பட்ட விநியோகத் துறையை பன்முகப்படுத்துவது, உலகளாவிய மையமாகச் சிங்கப்பூர் என்றும் நிலைத்திருக்க அனைத்துத் துறைகளையும் சார்ந்த வர்த்தகங்களை மேம்படுத்துவது போன்றவற்றில் மூன்றாம் குழு கவனம் செலுத்தும்.

இந்தக் குழுவை இரண்டாம் நிதி அமைச்சர் சீ ஹொங் டாட், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இருவரும் வழிநடத்துவர்.

தொடர்ந்து உள்ளூர்த் தொழிற்சங்கங்களுடன் இணைவதால் புதிய மீள்திறன் பணிக்குழு மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார் துணைப் பிரதமர் கான்.

அதேநேரம் ஒரே நோக்கம் கொண்ட நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி நம் பொருளியலை வலுப்படுத்த முடியும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்