தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தொற்றுநோய்களைக் கண்டறிவது, தடுப்பது, கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பொறுப்புகளை தொற்றுநோய் அமைப்பு ஏற்கும்.

தொற்றுநோய்களைச் சமாளிக்க புதிய சுகாதார அமைப்பு ஏப்ரலில் அமைகிறது

2 mins read
a3ce01fe-6460-47e8-bc69-bed890e5d9fa
நோய் பரவல்களின்போது ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார முயற்சியாக அரசாங்கம் விரைந்து செயல்பட புதிய தொற்றுநோய் அமைப்பு வழியமைக்கும் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) சுகாதார அமைச்சு தெரிவித்தது. - கோப்புப் படம்: சுகாதார அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூரில் தொற்று நோய்களைச் சமாளிக்க ஆணைபெற்ற தொற்றுநோய் அமைப்பு (Communicable Diseases Agency (CDA)) இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமைகிறது.

தொற்றுநோய்களைக் கண்டறிவது, தடுப்பது, கட்டுப்படுத்துவது ஆகிய பொதுச் சுகாதார செயல்பாடுகளை இது ஒருங்கிணைக்கும்.

தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரான 47 வயது பேராசிரியர் வெர்னன் லீ, ஏப்ரல் முதல் தேதியில் புதிய அமைப்பின் தலைமை நிர்வாகிப் பொறுப்பை ஏற்பார். அவர் தற்போதைய பதவியில் இருந்து விலகுவார்.

பேராசிரியர் லீ, பொதுச் சுகாதாரக் கொள்கையிலும் தொற்றுநோய் நிர்வாகத்திலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

நோய் பரவல்களின்போது ஒருங்கிணைந்த பொதுச் சுகாதார முயற்சியாக அரசாங்கம் விரைந்து செயல்பட தொற்றுநோய் அமைப்பு வழியமைக்கும் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிக்கையில், சுகாதார அமைச்சு தெரிவித்தது.

“சிங்கப்பூரைத் தொற்றுநோய் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அது முக்கியப் பங்கை வகிக்கும்,” என்று அது கூறியது.

தற்போது, சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் என்று பரந்த நிலையில் அந்தப் பணிகள் கையாளப்படுகின்றன.

தொற்றுநோய் நிர்வாகத்திலும் பொதுச் சுகாதார தயார்நிலையிலும் சிங்கப்பூரின் திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்த அமைப்பு அமைகிறது என்று அறிக்கை சுட்டியது.

2023 மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்றுப்பரவலை சிங்கப்பூர் எதிர்கொண்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் நோய்க் கட்டுப்பாடு, தொற்றுநோய் நிர்வாகத் திறன்களை ஒருங்கிணைக்க பொது சுகாதாரத்திற்கான தனிப்பட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

புதிய அமைப்பிற்கான சட்டக் கட்டமைப்பை வரையறுக்கும் மசோதா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

தொற்றுநோய் அமைப்பு ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்:

- பொதுக் கல்வி, தடுப்பூசி கொள்கைகள், தொற்றுநோய்த் தடுப்பு - கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதைத் தடுத்தல்.

- தொற்று நோய்களுக்கு எதிரான பொதுச் சுகாதார தயார்நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளை வழிநடத்தி ஒருங்கிணைத்தல், தடுப்பூசிகளை உருவாக்குதல், சிகிச்சைக்கான வசதிகளை வழங்குதல்.

- கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்துதல், அதிக அளவிலான தரவுகளை ஒருங்கிணைக்க செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வுகளின் பயன்பாட்டை ஆராய்தல்.

- தொற்றுநோய்கள், பரவல்கள் குறித்து ஆய்வுசெய்து செயல்படுதல், கொள்கை, அறிவியல் பரிந்துரைகளை வழங்குதல், தொற்றுநோய்ப் பரவலின்போது பொதுச் சுகாதாரம், சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.

- கொள்கைகளை உருவாக்க பயன்படுத்தும் பொதுச் சுகாதார ஆய்வுகளை நடத்துதலும் ஒருங்கிணைத்தலும்.

மேலும், மேம்பாடுகளை அறிந்துகொள்வதுடன் சிறந்த நடைமுறைகளைப் பகிரவும், உலகளவில் வளர்ந்து வரும் நோய் சூழ்நிலைகளுக்கு விரைந்து எதிர்வினையாற்றவும் அனைத்துலக பங்காளிகளுடன் இணைந்து இவ்வமைப்பு செயல்படும்.

குறிப்புச் சொற்கள்