2035 சூரிய மின்சக்தி இலக்கை எட்டப் புதிய உத்திகள்

2035 சூரிய மின்சக்தி இலக்கை எட்டப் புதிய உத்திகள்

கட்டடங்களுக்கு இடையே தொங்கும் தகடுகள், பாரம்பரியக் கட்டடங்களுக்குக் களிமண் ஓடு போன்ற சூரிய மின்சக்திப் பலகைகள்
படம்: எஸ்பிஎச் மீடியா

27 Oct 2026 - 8:42 pm

2 mins read

சிங்கப்பூர் தனது புதுப்பிக்கப்பட்ட 2035ஆம் ஆண்டிற்கான சூரிய மின்சக்தி இலக்கை அடைய பல புதுமையான வழிகளைக் கையாண்டு வருகிறது.

எரிசக்தி, வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் 2035ஆம் ஆண்டுக்குள் 4 கிகாவாட்-பீக் (GWp) சூரிய மின்சக்தியை உற்பத்தியை எட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) பகிர்ந்துகொண்டார்.

இந்த 4 கிகாவாட்-பீக், 2035ல் சிங்கப்பூரின் எதிர்பார்க்கப்படும் மின்சாரத் தேவையில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டை ஈடுகட்டும். தற்போது சிங்கப்பூர் கிட்டத்தட்ட 2.3 கிகாவாட்-பீக் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்து வருகிறது. 2030 இறுதிக்குள் இதை 3 கிகாவாட்-பீக் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாரம்பரியக் கட்டடங்களின் தோற்றத்தைப் பாதிக்காத வகையில் களிமண் ஓடுகளைப் போன்ற சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்தும் பரிசோதனைகள் சுவிஸ் நிறுவனமான சிஎஸ்இஎம் மற்றும் நில அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூரோங் தீவு உட்பட நாட்டின் 45% சூரிய மின்சக்தித் திறனைக் கையாளும் ‘ஜேடிசி’ நிறுவனம், உட்லண்ட்ஸ் லூப் 15ல் உள்ள இரு தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு இடையே தொங்கும் சூரியமின்சக்திக் கட்டமைப்பை 15 மாதங்களுக்குச் சோதிக்கவுள்ளது.

தற்காலிகக் கட்டுமானத் தளங்களில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க, நகரும் சூரிய மின்சக்திக் கருவிகளையும் ஜேடிசி அறிமுகப்படுத்துகிறது.

வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளைப் பொருத்துவதை ஊக்குவிக்க, எரிசக்தி சந்தை ஆணையம் புதிய இணையப் பக்கத்தை உருவாக்கவுள்ளது.

சோலார்நோவா திட்டத்தின் கீழ் தற்போது 8,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளிலும் 5,000க்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிகளிலும் சூரிய மின்சக்திக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

நிலப் பற்றாக்குறை, மேகமூட்டம் காரணமாக 2050க்குள் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் அதிகபட்சமாக 10 விழுக்காட்டை மட்டுமே சூரிய மின்சக்தியால் ஈடுசெய்ய முடியும் என்று கூறிய திருவாட்டி கான், இருந்தபோதும் சூரிய மின்சக்தியைப் பெறக்கூடிய அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் சிங்கப்பூர் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்