தேசியக் கல்விக்கழகத்தில் அமையவிருக்கும் புதிய கல்விக்கான தொழில்நுட்ப நிலையம் (Technology for Education Centre) சிங்கப்பூரின் கல்வித்துறையைத் தொழில்நுட்ப ரீதியாகப் புதுப்பிக்கவுள்ளது.
மேலும், தேசியக் கல்விக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் இனி செயற்கை நுண்ணறிவு உத்திகளைப் பயன்படுத்த அமேசான் இணையச் சேவைகள் (AWS) மூலம் ஆதரவு பெறுவர்.
தேசியக் கல்விக் கழகமும் ஏடபிள்யூஎஸ்சும் மே 29ஆம் தேதி இவற்றை அறிவித்தன.
ஏடபிள்யூஎஸ் உச்சநிலை மாநாட்டையொட்டி மே 26ஆம் தேதி தேசியக் கல்விக்கழகத்துக்கும் ஏடபிள்யூஎஸ்சுக்கும் இடையே கையெழுத்தான மூவாண்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்வழி இவை சாத்தியமாகின்றன.
புதிய நிலையத்தின்மூலம் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் ஏடபிள்யூஎஸ் உள்ளிட்ட தொழில்துறைப் பங்காளிகளுடன் இணைந்து கல்விக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க முடியும்.
எதிர்கால ஜூரோங் வட்டார ரயில் சேவையின் நன்யாங் கிரசென்ட் எம்ஆர்டி நிலையம் 2029ல் திறக்கப்படும் சமயத்தில் இப்புதிய நிலையமும் திறக்கப்படும்.
ஆனால், அதற்கு முன்பே சில வகுப்பறைகள் இத்தகைய தொழில்நுட்ப இணைமுயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசியக் கல்விக் கழகக் கல்வியாளர்களும் மாணவ ஆசிரியர்களும் ‘ஏடபிள்யூஎஸ் ஸ்கில் பில்டர்’ (AWS Skill Builder) வழி மேகக்கணிமைத் தொழில்நுட்பங்கள், கல்விசார் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் ஆசிரியர் தலைவர்களும் பயிற்சிக்காகத் தேசியக் கல்விக் கழகத்துக்குத் திரும்பும்போதும் இம்முயற்சிகள்வழி பயன்பெறுவர்.
அமேசான் பெட்ராக் (Amazon Bedrock), அமேசான் கியூ டெவலப்பர் (Amazon Q Developer) போன்ற ‘ஏடபிள்யூஎஸ்’சின் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள்மூலம் தேசியக் கல்விக் கழக மாணவ ஆசிரியர்களின் கற்றல் - சேவைப் பயணங்களும் மேம்படும். உலகில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம்மூலம் தீர்வுகாணும் திறன்களை அவர்கள் பெறுவர்.
தேசியக் கல்விக் கழக மாணவர்களுக்காக ‘கல்வியில் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கச் சவால்’ எனும் புதிய போட்டியும் அக்டோபர் மாதம் நடைபெறும்.
மாணவ ஆசிரியர்களோடு இம்முயற்சிகள் தொடங்கினாலும் அவை விளையாட்டு அறிவியல் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் விரிவாக்கப்படும்.
கல்விக்கான தொழில்நுட்பம் குறித்த இணைமுயற்சிகளை மேற்கொள்ள விரும்புவோர் தேசியக் கல்விக் கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.