செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையில் இரண்டு பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது சேவை வழங்கும் ஒரு பெட்டி கொண்ட ரயில்கள், சில பழைய இரண்டு பெட்டி கொண்ட ரயில்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய இரண்டு பெட்டி கொண்ட ரயில்கள் அறிமுகம் காண்கின்றன.
2028ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்தகைய மொத்தம் 25 புதிய ரயில்கள் சேவையில் இணையும். அதன் வாயிலாக, இந்த ரயில்களில் பயணிகள் கொள்ளளவு 15.8 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
அதனால் பயணிகள் மேலும் வசதியான, அதிக நெரிசலில்லாத பயணங்களை எதிர்பார்க்கலாம்.
முதற்கட்டமாக, புதிய ரயில்கள் பொங்கோல் வெஸ்ட் லூப், பொங்கோல் ஈஸ்ட் லூப் ஆகிய பாதைகளில் இரண்டு வாரயிறுதிகளில் இயக்கப்படும். பின்னர் ஜூலை மாத இறுதிக்குள் அவை வார நாள்களிலும் சேவை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
மூன்றாம் காலாண்டு முதல் எஞ்சிய 23 இரண்டு பெட்டி ரயில்களும் கட்டங்கட்டமாகச் சேவையில் இணையும் என்று கூறப்பட்டது. ரயில் பயணிகளின் தேவையை ஈடுகட்ட இலகு ரயில் கட்டமைப்புக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது.
இந்த இலகு ரயில் கட்டமைப்பை ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ நிறுவனம் இயக்கிவருகிறது.
புதிய ரயில்கள் ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 200 பேர் பயணம் செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானின் ‘மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் அந்த ரயில்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேம்பட்ட இருக்கை வடிவமைப்பு, ‘எல்இடி’ விளக்குகள், கதவு மூடுவது குறித்துப் பயணிகளை எச்சரிக்கும் விளக்குப் பட்டைகள் போன்றவை அவற்றில் சில.
மேலும், பயணிகள் வசதிக்காக ரயில் பெட்டிக்கு உள்ளே குளிர் சாதன முறை மேம்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, பழைய ரயில்களைவிடப் புதிய ரயில்களில் கூடுதலான கைப்பிடிகள் பொருத்தப்பட்டுள்ளன. நின்றவாறு பயணம் செய்வோருக்கு அது மேலும் வசதியாக இருக்கும்.
2028ஆம் ஆண்டு இறுதியில் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் கட்டமைப்பில், புதிய இரண்டு பெட்டி கொண்ட ரயில்களையும் சேர்த்து மொத்தம் 33 இரண்டு பெட்டி ரயில்கள் இயங்கும்.
செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பணிமனையும் விரிவாக்கப்படுகிறது.
பொங்கோல் ரயில் நிலையத்தில் புதிய ரயில்களின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
பணிமனை வேலைகளால் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் சில சேவைகள் தடைபடக்கூடும் என்று கூறிய அவர், அதனைப் பொறுத்துக்கொள்ளும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.