மனிதவள மேம்பாட்டை முடுக்கிவிட புதிய அமைப்பு உருவாக்கம்

சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஒன்றிணைப்பு

மனிதவள மேம்பாட்டை முடுக்கிவிட புதிய அமைப்பு உருவாக்கம்

2 mins read
7728e675-67be-4e74-9988-5cb609980499
மனிதவள அமைச்சின்கீழ், கல்வி அமைச்சின் மேற்பார்வையில் இயங்கவிருக்கும் புதிய அமைப்பு, இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவப்படும். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு ‘சிங்கப்பூர் ஊழியரணி, திறன் மேம்பாட்டு அமைப்பு’ உருவாக்கப்படும் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயிற்சி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காகப் பயனாளர்கள் இனி ஒரே தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரவுசெலவுத் திட்ட உரையின்போது அறிவிக்கப்பட்ட இந்த இணைப்பு குறித்த விரிவான விவரங்களை மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது டாக்டர் டான் வெளியிட்டார்.

மனிதவள அமைச்சின்கீழ், கல்வி அமைச்சின் மேற்பார்வையில் இயங்கவிருக்கும் இந்தப் புதிய அமைப்பு, இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவப்படும்.

ஊழியரணியின் தற்போதைய தலைமை நிர்வாகி டிலிஸ் போய் இந்தப் புதிய அமைப்பை வழிநடத்துவார் என்று டாக்டர் டான் கூறினார்.

“வருங்காலத்திற்கு ஏற்ற திறன்களை மேம்படுத்தவும் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறவும் சிங்கப்பூரர்களுக்கு ஆற்றல் அளிக்கும் நோக்கத்தைப் புதிய அமைப்பு கொண்டுள்ளது,” என்றார் மனிதவள அமைச்சர்.

அதனுடன், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கி ஊழியரணியை மேம்படுத்துவது, வாழ்நாள் கற்றலையும் துடிப்புமிக்க வாழ்க்கைத்தொழிலையும் ஊக்குவிப்பது ஆகியவையும் அந்த அமைப்பின் இலக்குகள் என்று அவர் சொன்னார்.

அமைப்புகளின் இணைப்பால் சிங்கப்பூர் ஊழியர்கள் எவ்வாறு பயனடைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இங் சீ மெங் கேட்டதற்குப் பதிலளித்த டாக்டர் டான், இந்த அமைப்புகளை இணைப்பதன்மூலம் மனிதவள மூலதனம் மேம்பாடு காணும் என்று தெரிவித்தார்.

“ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த அமைப்பு மற்ற அமைப்புகளுடனும் பங்காளிகளுடனும் இணைந்து செயலாற்றும்,” என்றார் டாக்டர் டான்.

குறிப்புச் சொற்கள்