ஆசியாவின் அதிநவீன புதுவகை எம்ஆர்என்ஏ ஆய்வுக்கூடம்

1 mins read
4ca644d3-a97b-4a7f-aded-24eecd2a96c3
நட்டி எம்ஆர்என்ஏ பையோஃபவுண்டரி ஆய்வுக்கூடம். - படம்: சாவ்பாவ்

ஆசியாவில் அமைந்துள்ள அதிநவீன எம்ஆர்என்ஏ (mRNA) தயாரிப்பு ஆய்வுக்கூடம் ஒன்று திங்கட்கிழமையன்று (நவம்பர் 4) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

வருங்காலத்தில் தலைதூக்கக்கூடிய கொள்ளைநோய்ப் பரவல்களைக் கையாள்வதற்கான தடுப்பூசிச் சோதனைகள், புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து வகைகளைச் சோதனைச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது சிங்கப்பூரில் அமைந்துள்ள புதிய ஆய்வுக்கூடத்தின் இலக்குகளாகும்.

இது, எம்ஆர்என்ஏ தயாரிப்புக்கென ஆசியாவில் அமையும் இத்தகைய முதல் ஆய்வுக்கூடம் என்று ஏஸ்டார் எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் நட்டி (NATi) என்றழைக்கப்படும் இயக்கம் தெரிவித்தது.

நட்டி எம்ஆர்என்ஏ பையோஃபவுண்டரி (NATi mRNA BioFoundry) எனப்படும் இந்த ஆய்வுக்கூடம், தேசிய அளவில் கொள்ளைநோய்ப் பரவல்களை எதிர்கொள்ளத் தயாராய் இருப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ள வகைசெய்வதாகவும் நட்டி குறிப்பிட்டது.

திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங், “சிங்கப்பூரில் ஆர்என்ஏ சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது மட்டுமின்றி இங்கேயே எம்ஆர்என்ஏவை உற்பத்தி செய்வதில் இது முக்கியமான முதற்படியாகும். இது, உயிர்மருத்துவப் புத்தாக்க முயற்சிகளில் முன்னணி மையமாக விளங்கவேண்டும் என்று சிங்கப்பூரின் இலக்குக்குக் கைகொடுக்கிறது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்