தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரிவிதிப்புப் போர் குறித்த எச்சரிக்கைகள் அச்சுறுத்துவதற்கல்ல: துணைப் பிரதமர் ஹெங்

3 mins read
357a53c2-fb2c-42a5-a6ab-22a1b98bca9f
பிடோக் புளோக் 85ல் உள்ள சந்தைக்கு ஏப்ரல் 12ஆம் தேதி காலையில் தொகுதி உலா சென்றபோது, குடியிருப்பாளர் ஒருவருடன் கைகுலுக்குகிறார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உலகளாவிய அளவில் நிலவும் வரிவிதிப்புப் போர் குறித்த அரசாங்கத்தின் எச்சரிக்கைகள் அச்சுறுத்துவதற்கு அல்ல என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் ஃபெங்ஷான் பகுதியில் சனிக்கிழமை காலை (ஏப்ரல் 12) அன்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் தொகுதி உலாவின்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

வரிவிதிப்பு குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் லியோங் மன் வாய், டான் செங் போக் ஆகியோர் உரைத்த கருத்துகள் பற்றித் திரு ஹெங்கிடம் கேட்கப்பட்டது.

வரிவிதிப்புப் போர் குறித்த எச்சரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கருத்துரைத்திருந்தது.

அதுகுறித்துப் பேசிய திரு ஹெங், அக்கருத்துகள் தமக்குத் திகைப்பளிப்பதாக இருந்தன என்றார்.

முன்னாள் நிதியமைச்சருமான திரு ஹெங் ஏப்ரல் 8ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்வைத்த எச்சரிக்கைகளை எதிரொலித்தார். அடுத்த சில ஆண்டுகள் ‘கடினமான ஆண்டுகள்’ என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளாகப் பொருளியலை நிர்வகித்து வருவதால், வரிவிதிப்புப் போர் குறித்து அக்கறை கொள்வதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், வர்த்தகப் போர் சிங்கப்பூரை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது குறித்து மிகவும் கவலையடைவதாகவும் சொன்னார்.

அமெரிக்காவிலேயே பல பொருளியல் வல்லுநர்கள் இந்த மந்தநிலை குறித்து எச்சரித்து வருவதாகச் சுட்டிய திரு ஹெங், “நிதிச் சந்தைகள் கடுமையான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன. அது நாம் நிராகரிக்க வேண்டிய ஒன்று எனக் கருதவில்லை,” என்றும் கூறினார்

மேலும், “இது அரசியலாக்குவது பற்றியன்று. இது சிங்கப்பூரில் உள்ள ஒவ்வோர் ஊழியரையும், ஒவ்வொரு வணிகத்தையும், சிங்கப்பூர் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரமான கொள்கைப் பிரச்சினை;” என்றும் திரு ஹெங் சொன்னார்.

“சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை கவலைகொள்ளும் வேளையில், சிறியதும் திறந்த பொருளியலுமான சிங்கப்பூர் இதுகுறித்து மிகவும் அக்கறைகொள்ள வேண்டும்,’ என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.

இந்த வரிவிதிப்புப் போரின் தாக்கம் குறுகிய காலப் பயணமாக இராது என்றும் மிகவும் நீளமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இத்தகைய நீண்ட போட்டியில், சிங்கப்பூர் விரைவாக இயங்கக்கூடியதும், நடுநிலையாகவும், நம்பகமானதாகவும் திகழ வேண்டும். அதன்வழி உலகில் உள்ள அனைவருடனும் நாம் ஒருங்கிணைந்து செயலாற்ற ஒத்துழைக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, மக்கள் செயல் கட்சியின் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் புதுமுகமாக உலா வரும் திரு தினேஷ் வாசு தாஸ் குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்கும் திரு ஹெங் பதிலளித்தார்.

“பொதுத்துறைப் பதவியிலிருந்து அண்மையில் விலகிய தினேஷ் வாசு தாஸ் மிகவும் நல்ல அதிகாரி, பொதுமக்களுக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்தார்,” என்றார் திரு ஹெங்.

திரு தினேஷ், ஈஸ்ட் கோஸ்ட் அல்லது சிங்கப்பூரின் வேறு எந்தத் தொகுதியிலோ வேட்பாளராகக் களமிறக்கப்படுவதைத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய திரு ஹெங், மசெக அணியில் அவர் வலுவான இணைப்பாக இருப்பார் என்றும் சொன்னார்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற மசெக தொகுதி உலாவில் திரு தினேஷ் காணப்படவில்லை.

பொதுத் தேர்தலில் மசெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலைக் கட்சியின் தலைமைச் செயலாளர் தேர்தல் நெருங்கும் வேளையில் முடிவுசெய்வார் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்