தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையம், மக்கள்நலப் பிரிவு ஆகியவற்றிற்கான புதிய தலைமைத்துவம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய சுகாதாரக் குழுமம் (என்எச்ஜி) இதற்கான அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்டது.
தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் நிர்வாக இயக்குநராக மருத்துவர் ஷான் வாசு நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள்நலப் பிரிவு மருத்துவ வாரியத் தலைவராக மருத்துவர் மார்க் சான் செயல்படுவார் என்று குழுமம் தெரிவித்துள்ளது.
இவ்விரு நியமனங்களும் ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தன.
டாக்டர் வாசு, டாக்டர் சான் ஆகியோரை இந்த முக்கியமான தலைமைப் பொறுப்புகளுக்கு வரவேற்பதில் குழுமம் மகிழ்ச்சியடைகிறது என்று கூறினார், ‘என்எச்ஜி’யின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஜோ சிம்.
“இவர்களின் தலைமைத்துவமும் தொற்றுநோய் சிகிச்சை, மூப்பியல் மருத்துவம், நோய்த்தடுப்புப் பராமரிப்பு ஆகியவற்றில் அவர்கள் கொண்டிருக்கும் நிபுணத்துவமும் பொதுச் சுகாதாரம் சார்ந்த இலக்கில் புத்தாக்கத்தையும் சிறந்த பராமரிப்பையும் ஊக்குவிக்கும்,” என்றார் திரு சிம்.
மருத்துவர் வாசு 2020ஆம் ஆண்டுமுதல் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நியமனம் குறித்துக் கருத்துரைத்த அவர், “சிறப்பு வாய்ந்த மருத்துவ சிகிச்சைகள், நோய்ப்பரவல் உள்ளிட்ட சுகாதார அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ளுதல், தொற்றுநோய் சார்ந்த ஆய்வுகள் உள்ளிட்டவற்றில் புத்தாக்கங்களை உருவாக்கி மேம்பாடு காணத் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.
புதிய பொறுப்பு குறித்துப் பேசிய டாக்டர் சான், மக்கள்நலப் பிரிவு மருத்துவ வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் நல்வாழ்வு வாழ உதவும் வகையில் குழுமம் மக்கள் நலன் சார்ந்த சுகாதார முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் , வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள், சமூகப் பங்காளிகளுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயலாற்றுவதை எதிர்நோக்குவதாகச் சொன்னார்.
“குடியிருப்பாளர்கள், நோயாளிகளின் வெவ்வேறு வாழ்வியல் நிலைகளை ஆதரித்தும், அதிகரித்துவரும் அவர்களின் தேவைகளைச் சிறப்பாகச் சமாளிக்கவும் ஏற்றவகையில் ஒருங்கிணைந்த சுகாதார, சமுதாயப் பராமரிப்புச் சூழலை உருவாக்க விழைவதாகக் கூறினார் டாக்டர் சான்.
தேசியச் சுகாதாரக் குழுமத்தின் டான் டோக் செங் மருத்துவமனையில் மூப்பியல் மருத்துவத் துறையில் மூத்த ஆலோசகராக டாக்டர் சான் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் ‘என்எச்ஜி‘ தெரிவித்துள்ளது.

