பொதுத் துறைக்கான உருமாற்ற விருது (பிஎஸ்டி) விழாவில் ஆறு பிரிவுகளில் பத்து விருதுகளைக் குவித்தது ‘என் எச்ஜி ஹெல்த்’.
பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்திற்காக வழங்கப்பட்ட விருதுகளில் இது ஆக அதிக எண்ணிக்கை. சிறப்பான சேவைகள், புத்தாக்கம், மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை நல்கியதற்காக மூன்று குழுக்களும் எழுவரும் சிறப்பிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 8) நடைபெற்ற பொதுச் சேவை விழாவில் ‘பிஎஸ்டி’ தற்காப்பு அமைச்சரும், பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
கடந்த அறுபது ஆண்டுகளில் சிங்கப்பூர் நிலைத்திருப்பதற்கும் அதன் வெற்றிக்கும் பொதுத் துறை எண்ணற்ற பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு சான், அது எதன்மேல் கட்டியெழுப்பப்பட்டது என்றும் தமது உரையின்போது விவரித்தார்.
“புதிய பாதைகளைத் துணிச்சலுடன் முன்னெடுப்பது, சிறந்து விளங்க இடைவிடாத முயற்சி, சிங்கப்பூரின் நீண்டகால நலனில் அசைக்கமுடியாத கவனம் உள்ளிட்ட மூன்று நீடித்த பண்புகளில் பொதுச் சேவையின் வெற்றிப் பயணம் கட்டியெழுப்பப்பட்டது,’’ என்று அவர் குறிப்பிட்டார்.
நலமிக்க சமூகங்களைப் பேணியதற்காக ‘என்எச்ஜி ஹெல்த்’தின் மக்கள்நலக் கூட்டு முயற்சிக்கு ‘நட்சத்திரப் பங்காளி’ விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக உளவியல்சார் குழுச் சிகிச்சை மறுவாழ்வு திட்டத்தினை உருமாற்றிய முதன்மையான தலைமைத்துவ பங்களிப்பிற்காக ‘துணிச்சல்மிகு செயலாற்றல்‘ (Dare to Do Award) விருது 44 வயது திருவாட்டி யோகேஸ்வரி மணியத்திற்கு வழங்கப்பட்டது.
மனநலக் கழக முதன்மைத் தொழிற்சார் சிகிச்சையாளரான திருவாட்டி யோகேஸ்வரி, கொவிட்-19 தொற்று மெதுவடைந்த காலக்கட்டத்தில் நோயாளிகள் தொடர் பராமரிப்பைப் பெற்றிட சக ஊழியர்களின் பன்முகத் திறன்களை ஒருங்கிணைத்து, அவர்களின் உளவியல் தேவைகளுடன், சமூகம் சார்ந்த இதர எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்யும் வகையில் முன்னோடி புத்தாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சீரிய முயற்சியில் துறைசார் நிபுணர்கள், மேலாளர்கள், உளவியலாளர்கள், தொழில்முறை சிகிச்சையாளர்கள் எனப் பல்வேறு இணை சுகாதாரக் குழுவினருடன் இணைந்து பல்வேறு அமர்வுகளை அவர் ஒருங்கிணைத்தார். அதன்வழி, நோயாளிகள் பாதிப்புகளிலிருந்து மீண்டு, நலமுடன் வாழ புத்தாக்கமிக்க செயல்திட்டங்களைக் குழுவினருடன் இணைந்து திருவாட்டி யோகேஸ்வரி நடைமுறைப்படுத்தினார் என்று ‘என் எச்ஜி ஹெல்த்’ செய்தியறிக்கை தெரிவித்தது.
இம்முயற்சி நோயாளிகளின் மாறுபட்ட அக்கறைகளை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க பற்பல குழுச் சிகிச்சை முறைகளை கையாள வழிவகுத்தது என்று திருவாட்டி யோகேஸ்வரி கூறினார்.
இம்முயற்சிக்கு பெரிதும் உறுதுணையாகத் திகழ்ந்த தம் குழுவினர் குறித்தும் அவர் கருத்துரைத்தார்.
‘இத்தகைய ஒருங்கிணைந்த அமர்வுகளை நோயாளிகளுக்கு அளிக்கும் இலக்கின் தொடர்பில் செய்ய நேரிட்ட கூடுதல் பொறுப்புகளைச் சக ஊழியர்கள் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். இதனால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஆலோசனைகளுடன் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ள முடிந்தது,’’ என்றார் திருவாட்டி யோகேஸ்வரி.
இத்துறைக்குள் வரவிரும்பும் இளையர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
‘‘கனிவுடன் சேவையாற்றி ஒன்றாகச் செயல்பட்டால் பயன்மிகு தாக்கத்தை எவராலும் ஏற்படுத்த இயலும். வெற்றி சிறிதோ பெரிதோ அனைத்தையும் கொண்டாடும் அணுகுமுறையும் இத்துறை சார்ந்த வல்லுநர்களுக்கு நற்பயனளிக்கும்,’‘ என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பல துறைகள் இணைந்து செயலாற்றுவது நல்வாழ்வைச் சாத்தியமாக்கும் என்றும் சொன்னார்.