சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ‘பின் த வேப்’ (Bin the Vape) தொட்டிகளில் மின்சிகரெட்டுகளை வீசுவோர் அடையாளம் காணப்பட மாட்டார்கள் என்று சுகாதார அறிவியல் ஆணையம் உறுதிகூறியுள்ளது.
மின்சிகரெட்டுகளை ஒப்படைக்க முன்வருவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கவலையை முன்னிட்டு ஆணையம் அவ்வாறு குறிப்பிட்டது. 23 சமூக மன்றங்களிலும் ஒரு குடியிருப்பாளர் கட்டமைப்பு நிலையத்திலும் மின்சிகரெட்டுகளை வீசுவதற்கான சிறப்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மின்சிகரெட்டுகளை வைத்திருப்போர், அவற்றை வாங்கி, விற்பனை செய்வோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படக்கூடும். ஆனால் தன்னிச்சையாக முன்வந்து மின்சிகரெட்டுகளைக் கைவிடுவோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
“மின்சிகரெட்டுகளைத் தொட்டிகளில் வீசுவோரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ளும் எந்த முயற்சியையும் சுகாதார, அறிவியல் ஆணையம் மேற்கொள்ளாது என்ற உறுதியைப் பொதுமக்களுக்குக் கொடுக்கிறோம்,” என்று சனிக்கிழமை (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் சொன்னது.
மின்சிகரெட்டுகளை வீசுவதற்கான சிவப்புத் தொட்டிகளை நோக்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொட்டிகளில் போடப்படும் மின்சிகரெட்டுகளை யாரும் எடுத்துவிடக்கடாது என்பதற்காக அந்த ஏற்பாடு என்று ஆணையம் விளக்கம் அளித்தது.
மின்சிகரெட் தொட்டிகளைத் திருடுவது, அவற்றைச் சேதப்படுத்துவது ஆகியவை குறித்து பேசிய ஆணையம், “தொட்டிகள் அனைத்தும் பூட்டப்பட்டிருப்பதோடு தூண் போன்றவற்றுடன் கட்டப்பட்டுள்ளன,” என்று சொன்னது.
தொட்டிகளில் போடப்படும் மின்சிகரெட்டுகளைத் திரும்ப எடுக்க முடியாது.
தொட்டிகளைச் சேதப்படுத்துவோரும் திருட்டில் ஈடுபடுவோரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
தொட்டிகளில் உள்ள மின்சிகரெட்டுகள் அடிக்கடி அப்புறப்படுத்தப்படும் என்றும் முறையாக அவற்றை அழிக்க எரியூட்டு ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
அதிகாரிகளிடம் பிடிபடுவதற்கு முன் மின்சிகரெட்டுகளைக் கைவிடும்படி ஊக்குவிக்க ‘பின் த வேப்’ திட்டம் தொடங்கப்பட்டது.