சிங்கப்பூர் நாணய ஆணையம் நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பால் உலகப் பொருளியலில் பின்னடைவு ஏற்பட்டபோதும் சிங்கப்பூர்ப் பொருளியல் தொடர்ந்து மீள்திறனுடன் விளங்குகிறது என்றும் அதனால் நாணயக் கொள்கையில் மாற்றம் செய்யவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) அது கூறியது.
இந்த ஆண்டு (2025) மூலாதாரப் பணவீக்கம் சராசரியாக 0.5 விழுக்காடாகப் பதிவாகும் என்று ஆணையம் குறிப்பிட்டது. 2026ல் அது 0.5 விழுக்காட்டிற்கும் 1.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம், இந்த ஆண்டுக்கான மூலாதாரப் பணவீக்கம் 0.5 விழுக்காட்டிற்கும் 1.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்திருந்தது.
நாணயக் கொள்கையில் ஆணையம் மாற்றம் செய்யாது என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டதே.
மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளைப் போலில்லாமல், சிங்கப்பூர் நாணய ஆணையம் நாட்டின் முக்கிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகச் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயரவோ குறையவோ அனுமதிக்கிறது.
இந்த ஆண்டு ஏற்கெனவே ஆணையம் அதன் நாணயக் கொள்கையை இருமுறை தளர்த்தியது. திரு டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளித்துவ நாடுகள் அனைத்தின்மீதும் பல்வேறு வரிகளை அறிவித்ததை அடுத்து, ஜனவரியிலும் ஏப்ரலிலும் அது அவ்வாறு நாணயக் கொள்கையைத் தளர்த்தியது.