சிங்கப்பூரில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இதனால், தங்கள் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு சீன நாட்டினருக்குச் சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம் நினைவூட்டியுள்ளது.
மரினா பே சேண்ட்சில் உள்ள சூதாட்டக் கூடத்தில் சூதாடிய பிறகே தங்கள் நாட்டு குடிமகன் உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சீனத் தூதரகம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது, அந்த நபர் எவ்வாறு தனது உயிரை மாய்த்துகொண்டார் போன்ற விவரங்களை அது வெளியிடவில்லை.
மாண்டவரின் இறுதி சடங்கிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவரின் குடும்பத்தினருக்குத் தூதரகம் வழங்கி வருவதாக அது சொன்னது.
இதற்கு முன்னரும் இதுபோன்ற நினைவூட்டல் அறிக்கை ஒன்றைச் சீனத் தூதரகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சீனப் புத்தாண்டு வருவதால் சூதாட்டத்திலிருந்து விலகி இருக்கவேண்டும்
அண்மை ஆண்டுகளில் சூதாட்டம் தொடர்பில் பல உயிரிழப்பு சம்பவங்களைக் கையாண்டதாகவும் முன்கூட்டியே பல எச்சரிக்கை குறிப்புகளை வெளியிட்டதாகவும் தூதரகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
சீனப் புத்தாண்டு நெருங்குவதால், சிங்கப்பூரில் உள்ள சீன சுற்றுப்பயணிகளும் குடிமக்களும் சூதாட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றும் தனது மக்களுக்கு அது நினைவூட்டியது.
தொடர்புடைய செய்திகள்
பின்வரும் சில எச்சரிக்கைகளையும் அது வெளியிட்டது.
- சீன நாட்டின் சட்டத்தின்படி அந்நாட்டு மக்கள் வெளிநாட்டில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானது.
- சூதாட்டம் தனிநபர் பொருளியல் வீழ்ச்சிக்கும் குற்ற நடவடிக்கைக்கும் வழிவகுக்கும்.
- வெளிநாட்டில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன நாட்டினரைக் கண்காணிக்க புதிய தளம் ஒன்று அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

