பழைய கொண்டோமினியக் கட்டடப் புதுப்பிப்புக்கு அரசாங்க நிதி தரப்படாது: ‘பிசிஏ’

பழைய கொண்டோமினியக் கட்டடப் புதுப்பிப்புக்கு அரசாங்க நிதி தரப்படாது: ‘பிசிஏ’

2 mins read
d2e46be4-d404-4019-a9df-42ac77c585ff
இந்த விவகாரம் குறித்து தேசிய வளர்ச்சி மற்றும் நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பழைய கொண்டோமினிய மற்றும் தனியார் கட்டடங்களைப் புதுப்பிக்க அரசாங்க நிதி வழங்கப்படாது என்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) தெரிவித்துள்ளது.

புதுப்பிப்பு மற்றும் மறுவடிவமைப்புப் (ஆர்&ஆர்) பணிகள், மின்தூக்கிப் பழுதுபார்ப்புப் பணிகள் போன்ற பணிகளுக்கு நிதி தரப்படாது என்று ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 20) ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

அரசாங்க இணை நிதியுதவியைப் (co-funding) பொறுத்தவரை, அத்தகைய பழைய மின்தூக்கிகளில் பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று ஆணையம் மறுவுறுதிப்படுத்தியது. மின்தூக்கிகள் கட்டப்பட்ட காலத்தில் நடப்பில் இல்லாத பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பது நோக்கமாகும்.

கதவுகள் முழுமையாக மூடாதபோது மின்தூக்கிகள் நகராமல் பார்த்துக்கொள்ளும் அம்சம், மின்தூக்கிகள் வேகமாக மேல்நோக்கிச் செல்லும்போது அவற்றைத் தானியக்க முறையில் நிறுத்தச் செய்யும் அம்சம் போன்றவை அத்தகைய மேம்பாடுகளில் அடங்கும்.

“ஆர்&ஆர் பணிகளுக்கோ சாதாரண மின்தூக்கி பழுதுபார்ப்புப் பணிகளுக்கோ மின்தூக்கியை மாற்றும் பணிகளுக்கோ இணை நிதியுதவியைப் பயன்படுத்த எங்களுக்கு எண்ணமில்லை,” என்று பிசிஏ குறிப்பிட்டது. அதுபோன்ற செலவுகளுக்கு அந்தந்த தனியார் கட்டடங்களுக்கென ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் ‘தி யூ‌ஷுவல் பிளேஸ்’ வலையொளித் தொகுப்பில் பேசப்பட்டதற்கு மறுநாள் ஃபேஸ்புக்கில் பிசிஏ அறிவித்தது. பழைய கொண்டோமினியத் திட்டங்களுக்கான பாதுகாப்பு மேம்பாடுகளை மேற்கொள்ளும் செலவில் ஒரு பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்பதை அந்தத் தொகுப்பு ஆராய்ந்தது. குறிப்பாகப் போதுமான சேமிப்பு இல்லாத ஸ்ட்ராட்டா (strata) திட்டங்களுக்கு இது பொருந்தும்.

இம்மாதம் நான்காம் தேதி, வரவுசெலவுத் திட்டத்தில் தமது அமைச்சுக்கான ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போது தேசிய வளர்ச்சி மற்றும் நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா இந்த விவகாரத்தின் தொடர்பில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து பேசப்பட்டு வந்தது.

குறிப்புச் சொற்கள்