என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதால், செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளுக்கான முன்பதிவு, விநியோகம் அல்லது அந்நிறுவனத்துடனான பங்காளித்துவத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று சிங்கப்பூரின் ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் தெரிவித்துள்ளது.
என்விடியா தயாரிப்புகளின் முக்கிய வாடிக்கையாளரான சிங்டெல், முன்பதிவு செய்த பெரும்பாலான சில்லுகளை ஏற்கெனவே பெற்றுவிட்டதாகவும் எஞ்சியவை உரிய நேரத்தில் வந்துசேரும் என எதிர்பார்ப்பதாகவும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) கூறியது.
விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலும்கூட, சில்லுகளை வழங்குவதற்குத் தங்களிடம் பலதரப்பட்ட நிறுவனங்கள் உள்ளதாக சிங்டெல்லின் மின்னிலக்க உள்கட்டமைப்புப் பிரிவான ‘டிஜிட்டல் இன்ஃப்ராகோ’வின் தலைமை நிர்வாக அதிகாரி பில் சாங் தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த அரையாண்டு நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தில் பேசிய சிங்டெல் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி யுவென் குவான் மூன், என்விடியா சில்லுகளைப் பயன்படுத்தும் வர்த்தகம் தங்கள் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சிறிய பகுதி மட்டுமே என்றார்.
என்விடியாவின் அண்மைய நிகழ்வுகளால் சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏஐ சில்லுகளை அனுப்புவதில் கடுமையான கண்காணிப்புச் சூழல் ஏற்படலாம் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். சில்லுகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அமெரிக்கக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க வட்டார நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைகளைத் தொடர்ந்து, விநியோகம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், சிங்கப்பூரில் உள்ள தங்கள் நிறுவன வாடிக்கையாளர்களின் முக்கியத் தரவுகள் நாட்டைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்கும் ‘ரீ:ஏஐ’ இறையாண்மை ஏஐ வர்த்தகத்திற்கான சில்லு விநியோகத்தில் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று திரு சாங் கூறினார்.
இவ்வர்த்தகத்துக்கான தரவு நிலையக் கொள்ளளவில் 4 மெகாவாட் அளவிலான ஏஐ சில்லுகள் ஏற்கெனவே பெறப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. எஞ்சிய 2 மெகாவாட் கொள்ளளவுக்கான சில்லுகள் உரிய நேரத்தில் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சில்லு விநியோகத்தில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ஏற்றுமதி மாற்றங்களைக் கண்காணித்துவருவதாகத் திரு யுவென் தெரிவித்தார்.
