சீன அறிவிப்பால் சிங்கப்பூர் தம்பதிகளுக்குப் பாதிப்பில்லை

2 mins read
9b653183-660e-417e-9ffd-cdb4f2f5c88a
தொழில் முனைவரான வெரோனிகா லோவும் 51, அனைத்துலக தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான அவரது 64 வயதான கணவர் ஸ்டீபன் வாஸ் இருவரும் சீனாவில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க ஏழு ஆண்டுகள் காத்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உறவில்லாத பிள்ளைகளை வெளிநாடுகளுக்குத் தத்துக்கொடுப்பதை நிறுத்தும் சீனாவின் திடீர் அறிவிப்பால் சிங்கப்பூரிலிருந்து பிள்ளைகளைத் தத்தெடுக்கும் விண்ணப்பங்கள் எதுவும் இல்லாததால் சிங்கப்பூர் குடும்பங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.

சீனாவின் செப்டம்பர் 6ஆம் தேதி அறிவிப்பால் எத்தனை சிங்கப்பூர் தம்பதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அமைச்சு பதிலளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், சீனா இனி மற்ற நாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் சீன நாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதிக்காது என்று கூறியிருந்தார். ரத்த தொடர்புடையவர்களின் குழந்தையையோ அல்லது மாற்றாந்தாய்க்குப் பிறந்த குழந்தையையோ மட்டுமே தத்தெடுக்க முடியும்.

சீனாவிலிருந்து எத்தனை குழந்தைகள் 2023ல் அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் சிங்கப்பூர் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டன என்று அமைச்சு கூறவில்லை. 2015ல், அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சீனாவிலிருந்து 25 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.இது அக்காலப்பகுதியில் தத்தெடுக்கப்பட்ட மொத்தக் குழந்தைகளில் ஏறத்தாழ 1 விழுக்காடு மட்டுமே.

நீண்டகால காத்திருப்பு காரணமாக சீனாவிலிருந்து தத்தெடுப்பது சிங்கப்பூர் பெற்றோரிடம் பிரபலமாக இல்லை என்று தத்தெடுப்பு முகவர்கள் கூறியுள்ளனர். மேலும், மற்ற நாடுகளைப் போலன்றி அங்கு தாங்கள் தத்தெடுக்க விரும்பும் குழந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாது. குழந்தையின் வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தங்கள் விருப்பத்தைக் கூற முடியும்.

சீனப் பிள்ளைகளைத் தத்தெடுக்க டச் சமூக சேவைகள், ஃபெய் யூ சமூக சேவைகள் ஆகிய இரு அமைப்புகளை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நியமித்துள்ளது. 2004 முதல், சீனாவிலிருந்து குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோர் இந்த சமூக சேவை அமைப்புகளையே நாட வேண்டும். சீனாவிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க வர்த்தக தத்தெடுப்பு முகவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சீன அதிகாரிகள் தம்பதியினர் தெரிவித்த குழந்தையின் வயது, உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குழந்தையைத் தேர்வு செய்வார்கள் என்று டச் சமூக சேவைகளின் டச் தத்தெடுப்பின் தலைவரான செல்வி டெய்ட்ரே லிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்