வடகிழக்குப் பருவமழை: கடலில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுரை

2 mins read
b497e71b-1500-49bf-b9d9-7fc807b617c6
படகோட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பயணம் மேற்கொள்ளும்போதும் கடலில் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த வடகிழக்குப் பருவமழைக் காலம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தின்போது சில வேளைகளில் காற்று மேலும் பலமாக வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் ஓரளவாவது கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

படகோட்டம் (காயாக்கிங், கனூயிங்), ‘விண்ட்சர்ஃபிங்’ போன்ற கடல் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எப்போதும் உயிர்க்காப்புக் கவசம் அணியவேண்டும் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வலியுறுத்துகிறது.

கடலுக்குப் போவதற்கு முன்பு மக்கள் வானிலை நிலவரத்தையும் கடல் நிலவரத்தையும் தெரிந்துகொள்ளுமாறும் தங்களின் நடவடிக்கைகளுக்குத் தேவையான சாதனங்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பாதுகாப்பு வழிகாட்டிகளைப் பின்பற்றுவதுடன் அவசர வேளைகளில் எடுக்கப்படவேண்டிய வழிமுறைகளை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.

வானிலை, கடல் நிலவரம் குறித்த தகவல்களை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வானிலை மோசமாக இருக்கும் வேளைகளில் நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

நிலவரம் அபாயகரமாக இருந்தாலோ நீர் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்களுக்கு அல்லது பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டாலோ அந்நடவடிக்கைகளை நடத்துபவர்கள் அனுமதி மறுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருள்களும் சாதனங்களும் நல்ல நிலையில் இருப்பதைக் கடல் கேளிக்கை நடவடிக்கைகளை வழங்குவோர் உறுதிசெய்யவேண்டும்.

நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பு பங்கேற்பாளர்களிடம் உகந்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டிருப்பதையும் உயிர்க்காப்புக் கவசம் அணிந்திருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்று ஆணையம் சுட்டியது.

பயணிகள் படகு உட்பட கப்பல்களில் பயணம் செய்வோர் அடிப்படைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அதன் அறிவுரை அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்