வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அண்மைய தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் (பிடிஒ) விற்பனை நடவடிக்கையில், தோ பாயோ, தெங்கா ஆகிய வட்டாரங்களில் உள்ள நான்கு அறை வீடுகளுக்கு, முதல்முறையாக வீடு வாங்குபவர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.
இதற்கான விண்ணப்ப விகிதங்கள் ஆகஸ்ட் 2022க்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன.
நவம்பர் 4ல் விண்ணப்பங்களுக்குத் திறக்கப்பட்ட இந்த விற்பனை அறிமுகத்திலிருந்து, குடும்பங்களுக்கான வருமான உச்சவரம்பு $16,000 ஆகவும், தனிநபர்களுக்கான வருமான உச்சவரம்பு $8,000 ஆகவும் உயர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்துள்ளது.
நவம்பர் 11ல் மாலை 5 மணி நிலவரப்படி, 7,964 பிடிஓ வீடுகளுக்கு மொத்தம் 35,603 விண்ணப்பதாரர்கள் என்ற எண்ணிக்கை பதிவாகியுள்ளது
அதாவது, ஒவ்வொரு வீட்டுக்கும் 4.5 விண்ணப்பதாரர்கள் என்ற விகிதமாக அது உள்ளது.
இது ஆகஸ்ட் 2022-ல் இருந்த 7.8 என்ற விகிதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பிடிஓ விண்ணப்ப விகிதமாகும் என்று ‘ஹட்டன்ஸ் ஏஷியா’ சொத்துச் சந்தை நிறுவனத்தின் தரவுப் பகுப்பாய்வு மூத்த இயக்குநர் லீ ஸீ டெக் தெரிவித்தார்.
அக்டோபர் 2024க்குப் பிறகான பிடிஓ திட்டம் ஒன்றுக்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை இந்தத் திட்டம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த பிடிஓ விற்பனையில் ஏறத்தாழ 22,600 பேரும், பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 14,000 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
தோ பாயோ, பேஷோர் போன்ற பிரபலமான இடங்களில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களே அதிக தேவைக்குக் காரணம் என்று சொத்துத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
நவம்பர் 11ஆம் தேதி வெளிவந்த அண்மைய நிலவரப்படி கேல்டிகாட் நிலையத்திற்கு அருகிலுள்ள ‘பிரைம்’ திட்டமான தோ பாயோ ஹில்சைடில் உள்ள 584 நான்கு அறை வீடுகளுக்கு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறுக்கும் மேற்பட்ட முதல்முறை விண்ணப்பதாரர்கள் போட்டியிடுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வீடுகளை விற்கும்போது 11 விழுக்காடு மானியத்தை அரசிடம் திருப்பிச் செலுத்தும் விதி உள்ளது.
நகர மையம், போக்குவரத்து முனையங்கள், முக்கிய வசதிகளுக்கு நெருக்கமாக இருக்கும் பிரைம், பிளஸ் வீடுகள், கடுமையான மறுவிற்பனை நிபந்தனைகளுடன் வருகின்றன.
இரண்டும் 10 ஆண்டு குறைந்தபட்ச குடியிருப்பு காலத்தைக் கொண்டுள்ளவை. மேலும் பிரைம் வீடுகளை மறுவிற்பனை செய்யும்போது அதிக மானியத் தொகையை அரசிடம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
