அடையாள அட்டை எண்களை மறைச்சொற்களாகப் பயன்படுத்தக்கூடாது என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் சனிக்கிழமை (டிசம்பர் 14) வலியுறுத்தியுள்ளது.
அடையாள அட்டை எண்கள் ரகசியமானவை அல்ல என்பதால் நிறுவனங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தக்கூடாது. அடையாள அட்டை தரவைப் பயன்படுத்துவதை அதை நிர்வகிக்கும் சட்டப்படி நடக்க வேண்டும்.
“ஒருவரது பெயரும் அடையாள அட்டை எண்ணும் அவர் யார் என்பதை அடையாளம் காட்டுகின்றன. அது அவர் யாரென்று நிரூபிக்கும் அங்கீகாரம். இதற்கு அடையாளத்திற்கான ஆதாரம் தேவை, எடுத்துக்காட்டாக, கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் தரவு,” என்றது ஆணையம்.
தனிநபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு நிறுவனங்கள் அடையாள அட்டை எண்ணைக் மறைச்சொல்லாகப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற நடைமுறைகளைக்கொண்ட அமைப்புகள் அவற்றை விரைவில் கட்டங்கட்டமாக மாற்ற வேண்டும் என்று அது கூறியது.
அடையாள அட்டை எண் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் தரவு பாதுகாப்புக் கடப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது.
சட்டப்படி தேவைப்பட்டலன்றி, நிறுவனங்கள், அடையாள அட்டை எண்களைச் சேகரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் அல்லது வெளியிடுவதற்கும், அடையாள அட்டைகளை நகல் எடுப்பதற்கும் இன்னமும் தடை உள்ளது என்பதையும் ஆணையம் உறுதிப்படுத்தியது.
கணக்காய்வியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (ஏக்ரா) டிசம்பர் 9 அன்று தொடங்கிய பிஸ்ஃபைல்’ இணைய வாசலில், கட்டணம் செலுத்தாமல் ஒருவர் தேடுதல் அம்சத்தைப் பயன்படுத்தி முழு அடையாள அட்டை எண்களைப் பெற முடிந்ததால் இப்பிரச்சினை எழுந்தது. பொதுமக்கள் கவலை தெரிவித்ததை அடுத்து அந்தத் தேடுதல் அம்சம் டிசம்பர் 13ஆம் தேதி தற்காலிகமாக முடக்கப்பட்டது.
ஒருவரது பெயரைப் போலவே அடையாள அட்டை எண்ணும் கருதப்படுகிறது. எனவே, அடையாள அட்டை எண்களைப் பாதி மறைத்துப் பயன்படுத்தும் தற்போதைய நடைமுறையிலிருந்து விலகும் எண்ணம் உள்ளதாக டிசம்பர் 14ஆம் தேதி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அடையாள அட்டை எண்கள் தனிப்பட்டவை, ரகசியமானவை என்று இனிமேல் கருதப்படக்கூடாது என்ற அரசாங்கம் கூறியதை அடுத்து, அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவது குறித்த புதிய ஆலோசனை வழிகாட்டுதல்களை ஆணையம் வழங்கவுள்ளது.
எனினும், தொழில்துறை, பொது ஆலோசனைக்குப் பிறகே வழிகாட்டி நெறிமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
பொதுமக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அமைச்சும் ஏக்ராவும் டிசம்பர் 14ஆம் தேதி மன்னிப்புக் கேட்டன. குழப்பம் ஏற்பட்டதற்றாக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் அறிக்கையில் மன்னிப்புக் கேட்டது.