‘மொழிபெயர்ப்பை மேலும் வளமுறச் செய்யும் புத்தாக்கத் திட்டங்கள் அறிமுகம்’

‘மொழிபெயர்ப்பை மேலும் வளமுறச் செய்யும் புத்தாக்கத் திட்டங்கள் அறிமுகம்’

2 mins read
தேசிய வளர்ச்சி, மின்னிலக்க மேம்பாடு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அறிவிப்பு
b0546f3d-61a7-47f7-b288-96028108c8dd
தேசிய வளர்ச்சி, மின்னிலக்க மேம்பாடு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையை மேலும் செழிப்புறச் செய்யும் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய வளர்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாடு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15ஆம் தேதி காலை நடைபெற்ற தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் பத்தாவது ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், குழு கடந்த ஆண்டுகளில் இலக்குகளை அடைவதன் தொடர்பில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

“பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், அனைத்துலக அளவிலான மொழிபெயர்ப்புத் தரத்தைக் கைக்கொண்டு, நாட்டின் மொழிபெயர்ப்புக் களத்தை மேம்படுத்த, இக்குழு தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது,” என்றார் திரு. டான்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழு எதிர்காலத்தில் சமூகம், திறனாளர்கள், தொழில்நுட்பம் எனும் மூன்று முக்கிய ஆதார உத்திகளில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்ட அவர், அதன் தொடர்பில் வரவிருக்கும் புதிய அறிவிப்புகளையும் தமது உரையில் வெளியிட்டார்.

“மொழிபெயர்ப்புத் தொழில்துறைப் பணிக்குழு நிறுவப்படவுள்ளது. நாட்டின் மொழிபெயர்ப்புக் களத்தை மதிப்பீடு செய்து, அது தொடர்பான பரிந்துரைகளை அந்தப் பணிக்குழு தாக்கல் செய்யும்.

“மொழிபெயர்ப்பாளர்கள் மேன்மேலும் துல்லியமாகவும் ஆக்கத்திறனுடன் மொழிபெயர்ப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ‘மொழிபெயர்ப்பு ஆலோசனைக் குழு’ அமைக்கப்படவுள்ளது,” என்றும் திரு டான் கூறினார்.

மேலும் ‘எஸ்ஜி டிரான்ஸ்லேட்’ இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருளை மறுஆய்வு செய்து, ‘எஸ்ஜி டிரான்ஸ்லேட் 2.0’வை வெளியிடும் எண்ணம் உள்ளதாகவும் குறிப்பிட்ட திரு டான், இந்த முயற்சிகள், சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தற்போதைய உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

மொழிபெயர்ப்பு என்பது வல்லுநர்களுக்கு மட்டுமே சாத்தியமானதன்று. அதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது என்பதைச் சுட்டிய மூத்த துணை அமைச்சர், “சிங்கப்பூரர்களை மொழிபெயர்ப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இக்குழு நீண்டகாலமாக முயல்கிறது; மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டவும், பங்கேற்கவும் அவர்களை ஊக்குவிக்கிறது; அதற்கான முயற்சிகளை அது தொடர்ந்து மேற்கொள்கிறது,” என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்