கரப்பான்பூச்சிகளைக் கொண்டு குழாய்களைச் சோதிக்கும் முன்னோடித் திட்டம்

கரப்பான்பூச்சிகளைக் கொண்டு குழாய்களைச் சோதிக்கும் முன்னோடித் திட்டம்

2 mins read
4d65b8df-a3c6-432f-b868-d971b55c90cc
குழாய்களின் அடியில் உள்ள பழுதுகளைக் கண்டறியும் நவீன திட்டத்தை என்டியு உருவாக்கி வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயனீட்டுக் குழாய்களுக்கு அடியில் இருண்ட பகுதியில் நுழைந்து கசிவு, அரிப்பு போன்றவற்றைக் கண்டறியும் புதிய திட்டத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) உருவாக்கி வருகிறது.

‘மடகாஸ்கர் ஹிஸிங்’ கரப்பான்பூச்சிகள் இதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பயனீட்டுக் குழாய்களை பராமரிக்கும் புரட்சிகரமான முன்னோடித் திட்டத்தில் கரப்பான்பூச்சிகளுடன் நவீன தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருக்கும்.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து என்டியு ஆய்வாளர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு கரப்பான்பூச்சியிலும் சிறிய பிளாஸ்டிக் பொருத்தப்பட்டிருக்கும். அது, மின்சில்லு கொண்ட மின்சுற்றுத் தகடை இழுத்துச் செல்லும். அதில் கேமரா, எல்இடி விளக்கு, இடத்தைக் கண்டறிவதற்கான தொடர்பு வசதிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண் மடகஸ்கர் கரப்பான்பூச்சியின் நீளம் சராசரி 6 செ.மீட்டர்.

குழாய்களை சோதனையிடும் நடைமுறை தானியக்கமாக்கப்பட்டுள்ளது. அது, குழாய்களில் உள்ள கோளாறுகளைக் கண்டுபிடித்து எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உண்மையான சூழல்களில் இத்தகைய கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்துவதே இலக்கு. ஆனால் சில தடைகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

என்டியு இயந்திரவியல் மற்றும் விமானத்துறை பொறியியல் பிரிவின் பேராசிரியரும் இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான ஹிரோடேகா சாடோ, உண்மையான குழாய்களின் சூழல் இருட்டாகவும் ஈரமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டில் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தேடி மீட்கும் முயற்சியில் பத்து முறைக்கு மேல் இத்தகைய கரப்பான்பூச்சிகள் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னோடித் திட்டம் சோதிக்கப்பட்டு வருகிறது.

இதில் பேராசிரியர் சாடோவின் குழுவினர், சிங்கப்பூர் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப முகவை, ‘கிளாஸ் எஞ்சினியரிங் அண்ட் சொலூஷன்ஸ்’ பொறியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்