ஆசியான் வேளாண் துறையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராயும் என்யுஎஸ்

1 mins read
71365a3c-1657-4bb2-9631-6ce91dc2a435
நீடித்த நிலைத்தன்மை கொண்ட அனைத்துலக வளங்களுக்கான சிங்கப்பூர் கலந்துரையாடலில் பேசும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மாற்றத்தால் தென்கிழக்காசியாவின் வேளாண் துறையில் ஏற்படக்கூடிய தாக்கத்தை அறிய சிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ புதன்கிழமை (மே 28) கூறினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) வெப்பமண்டல கடல்துறை அறிவியல் கழகம் (Tropical Marine Science Institute) நடத்தும் இந்த ஆய்வு பருவநிலை அபாயங்களை மேலும் நன்கு கையாள உதவும் என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார். அப்போதுதான் இவ்வாட்டாரம், பருவநிலை மாற்றம் தேசிய அளவிலும் உள்ளூர் அளவிலும் பயிர் விளைச்சலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை நன்கு திட்டமிட முடியும் என்று அவர் சுட்டினார்.

கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வு, அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு, இந்த வட்டாரத்தின் உணவுப் பாதுகாப்புக்கு மெருகூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகம் ஏற்பாடு செய்த நீடித்த நிலைத்தன்மை கொண்ட அனைத்துலக வளங்களுக்கான சிங்கப்பூர் கலந்துரையாடலில் (Singapore Dialogue on Sustainable World Resources) திருவாட்டி ஃபூ பேசினார்.

குறிப்புச் சொற்கள்