இளையர்களுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வுக் குறிப்பு

2 mins read
தேசிய இளையர் மன்றம் - கப்லான் சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவத் திட்டம்
39d48a1c-b173-49f1-a9b8-e9bae1a29471
புரிந்துணர்வுக் குறிப்புடன் (இடமிருந்து) தேசிய இளையர் மன்ற தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சுவா, கப்லான் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அலெக்ஸ் செவ்ரோல். - படம்: கப்லான் சிங்கப்பூர்

மாணவர்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தவும், ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் தேசிய இளையர் மன்றம், கப்லான் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கிடையே உத்திபூர்வ பங்காளித்துவ திட்டம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு மே 14ஆம் தேதியன்று கப்லான் சிட்டி வளாகத்தில் நடைபெற்ற ‘இளையர்களை ஊக்குவித்தல், மாற்றத்துக்கு வழிவகுத்தல்’ எனும் விழாவில் கையெழுத்திடப்பட்டது.

சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், கல்வி, தொழில்துறை ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் இரு அமைப்புகளுக்கும் உள்ள கடப்பாட்டை இந்நிகழ்ச்சி கோடிட்டுக்காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முன்னெடுப்பு கப்லான் மாணவர்கள், முன்னாள் மாணவர்களுக்கு ஆதரவாக அமையும். குறிப்பாக 18 முதல் 35 வயதுவரையுள்ளோர்க்கு பணியில் வளர்ச்சி, தன்மேம்பாடு, தொழில் வல்லுநர்களுடனான ஈடுபாடு, தொண்டூழியம் எனப் பல்வேறு அம்சங்களில் பயனளிக்கும்.

தேசிய இளையர் மன்றத்தின் ‘டிஸ்கவர்’ இணையவாசலுடன் கப்லான் கல்வி நிலையத்தின் வாழ்க்கைத் தொழில் ஆயத்தநிலைத் திட்டமும் இணைக்கப்படுவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்களை இளைய மாணவர்களுடன் இணைத்துத் தொழில்முறைத் தொடர்புகளை இது வலுப்படுத்தும் என்றும் இளையர்களை மையமாகக் கொண்ட உரையாடல்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இளையர்கள் சமூகத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த உகந்த வினையூக்கியாக அமைவார்கள் என்றும் அவர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு இந்தப் பங்காளித்துவ முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கப்லான் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அலெக்ஸ் செவ்ரோல் குறிப்பிட்டார்.

எதிர்கால மாற்றங்கள் சிறப்பாக அமைய இளையர்களின் பங்களிப்புடன் சமூக அமைப்புகளின் ஆதரவும் முக்கியம் என்றும் இந்த இணைப்பு பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கும் என்றும் தேசிய இளையர் மன்ற தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சுவா கூறினார்.

மேலும், கப்லான் மாணவர்களின் இணைப்பாட நடவடிக்கைகள், தன்னார்வக் குழுக்களின் முன்னெடுப்புகளும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. எதிர்கால மாற்றத்திற்கான இளையர்களின் பங்கு, அவர்களது ஈடுபாட்டின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்