மூத்த குடிமக்களை ஆற்றல்மிக்கவர்களாகத் திகழச் செய்யும் இலக்குடன் $2 மில்லியன் நிதியாதரவுடன் மூத்தோர் பராமரிப்பு ஆதரவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஓசிபிசி சீனியர்கேர் திட்டம்’ என அழைக்கப்படும் இத்திட்டத்தை புக்கிட் கேன்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சனிக்கிழமை (மார்ச் 29) காலை தொடங்கி வைத்தார்.
தேசிய அளவிலான இத்திட்டம் செம்பவாங் வட்டாரத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
உடல் தகுதியுடன் உள்ளமும் மூப்படையாதிருந்தால் 65 எனும் வயது முதுமையன்று என்றும், அனைவரும் இணைந்து பங்காற்றினால், சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்றும் அவர் சொன்னார்.
மூத்தோர்நலப் பராமரிப்பை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அறிமுகம் கண்டுள்ள இத்திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 180,000க்கும் மேற்பட்ட மூத்தோருக்குப் பயனளிக்கும் என்று ஓசிபிசி குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது.
நிகழ்ச்சியில் பேசிய ஓசிபிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் வோங், “வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுவாக்கில் மூப்படைந்தோரைப் பேரளவில் கொண்டுள்ள, அதாவது ‘சூப்பர் ஏஜ்டு’ சமூகமாக மாறும் பாதையில் சிங்கப்பூர் பயணம் செய்யும் இவ்வேளையில் இத்திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
“மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ S$2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மூத்த குடிமக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கவுள்ள இத்திட்டம் சுகாதாரம், செல்வவளம், எழுத்தறிவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி மூத்தோர் சீராக மூப்படைய உதவும்,” என்றார்.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக ‘கேர் கார்னர்’ சிங்கப்பூருடன் இணைந்து, எளியோரின் இல்லங்களில் உள்ள மூத்தோருக்கு மூப்பியல் சார்ந்த ஆலோசனை அமர்வுகளுக்கு ஓசிபிசி நிதியாதரவு வழங்கவுள்ளது. இத்தகைய முயற்சியைக் கூட்டாண்மை நிறுவன ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பரவலாக கிளைமொழிகளைப் பேசும் மூத்தோருக்கு உதவ ‘ஓசிபிசி பராமரிப்புத் தூதர்கள்’ எனும் பணியும் உருவாக்கப்பட்டுள்ளது. நிதிவளம் சார்ந்த எழுத்தறிவுடன் மோசடிகளுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக மின்னியல் வங்கிச் சேவைகளில் ஈடுபட மூத்தோரை ஊக்குவிப்பது, மத்திய சேம நிதி உள்ளிட்ட முக்கியத் தலைப்புகளில் முதியோருக்குக் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளும் இத்திட்டம் வாயிலாக மூத்தோரைச் சென்றடையவுள்ளன.
இதற்கிடையே, துடிப்புடன் மூப்படைவதற்கும், முதியோர் நலன் பராமரிப்புக்கும் ஆதரவு வழங்கவுள்ள இத்திட்டம் குறித்து தமிழ்முரசிடம் கருத்துரைத்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாட்டி சுஷிலா தேவி, 71.
செம்பவாங் குடியிருப்பாளரான திருவாட்டி சுஷிலா, “என்னைப் போன்ற முதியவர்கள் சில நேரங்களில் தனிமையாக உணரக்கூடும். அவ்வகையில் மூத்தோருக்காக அறிமுகம் கண்டிருக்கும் இத்திட்டம் எண்ணற்றோர்க்கு உதவும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.