சிங்கப்பூரின் ஆகாய, நில, கடல் சோதனைச்சாவடிகளில் இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 19 மின்சிகரெட் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஏறக்குறைய 90,000 மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) சுகாதார அமைச்சும், சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் 3,700க்கும் அதிகமானோர் பிடிபட்டதாகக் குறிப்பிட்டது.
ஜனவரி முதல் மார்ச் வரை பிடிபட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க அது 20 விழுக்காடு அதிகம். அப்போது 3,100க்கும் அதிகமானோர் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.
ஆகஸ்ட் 12 நிலவரப்படி, கேபோட் எனும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் தொடர்பில் 29 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் 9 சம்பவங்கள் இறக்குமதி அல்லது விற்பனை தொடர்பானது. மற்றவை சட்டவிரோத பயன்பாடு தொடர்பானவை.
ஏப்ரல் முதல் ஜூன் வரை மின்சிகரெட்டுகளுடன் இருக்கும் புகைப்படங்களையோ காணொளிகளையோ சமூக ஊடகங்களில் பதிவேற்றிய எட்டு பேருக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் அபராதம் விதித்தது.
காலாங்கில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் மின்சிகரெட்டைப் பயன்படுத்தும் காணொளி இணையத்தில் வந்ததைத் தொடர்ந்து இரண்டு 18 வயது இளையர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன.
சைக்கிள் கடைக்கும் சென்ற அதிகாரிகள் 17 வயதிலும் 29 வயதிலும் மின்சிகரெட்டைப் பயன்படுத்திய மேலும் இரண்டு ஆடவரைப் பிடித்தனர். அவர்கள் நால்வருக்கும் அப்போதே அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட் விற்பனை தொடர்பில் இணையத்தில் வெளிவந்த 2,000க்கும் அதிகமான விளம்பரங்களை அகற்ற சுகாதார அறிவியல் ஆணையம் மின் வர்த்தகத் தளங்களுடனும் சமூக ஊடகத் தளங்களுடனும் இணைந்து செயலாற்றியது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை எட்டு ஆடவர்மீதும் நான்கு பெண்கள் மீதும் மின்சிகரெட் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆணையம் சுமத்தியது. அவர்கள் 17லிருந்து 46 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கேபோட்டை இறக்குமதி செய்ததற்காகவும் விற்பனை செய்ததற்காகவும் ஐவர்மீது நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.