சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றில் ‘அனுமதியின்றி ஏறிய’ சம்பவத்தில் கப்பல் சிப்பந்தி ஒருவர் காயமடைந்துள்ளார்.
சிங்கப்பூர் வட்டாரக் கடற்பகுதிக்கு வெளியே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 7 மணியளவில் அனுமதியின்றி ஏறியது குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
கண்காணிப்பை விழிப்புடன் வைத்திருக்குமாறு கப்பல்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஆணையம் வழங்கி வருகிறது.
அந்தக் கப்பல் தற்போது சிங்கப்பூர் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளது.
சிங்கப்பூர் கடலோரக் காவல் படையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் எண்ணெய்க் கப்பல் குழுவினருக்கு உதவினர். காயமடைந்த சிப்பந்தி மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டார்.
காலை 7.10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வெஸ்ட் கோஸ்ட் கடல்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து இரு கடல் தீயணைப்பு, மீட்புக் கப்பல்களைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக அது கூறியது.
ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என அது குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கப்பலில் சிங்கப்பூர் சிப்பந்திகள் யாரும் இல்லை என்று கூறிய சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், அனைத்து சிப்பந்திகளும் கணக்கெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
“சிங்கப்பூர் நீரிணையில் கடற்பயணத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை,” என்றும் அது கூறியது.