சிங்கப்பூரர்களில் 44 விழுக்காட்டினர் அரசாங்க ஆதரவிலான துணைதேடும் சேவைகளுக்கு ஆதரவு
அரசாங்கத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஃபர்ஸ்ட்டேட்’ எனும் துணைதேடும் தளத்தைப் பயன்படுத்தத் தகுதி பெற்றால், சிங்கப்பூரின் ஒற்றையர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் அதனைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ‘யூகவ்’ (YouGov) நிறுவனத்தின் அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இளம் தலைமுறையினர் அந்தத் தளத்தை நாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ‘ஜென் ஸி’ தலைமுறையைச் சேர்ந்த ஒற்றையர்களில் 49 விழுக்காட்டினர் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். மில்லேனியல் தலைமுறையினரிடம் இது 28 விழுக்காடாகவும், ‘ஜென் எக்ஸ்’ பிரிவினரிடம் 23 விழுக்காடாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக ஒற்றையர்களில் 31 விழுக்காட்டினர் இத்தளத்தைப் பயன்படுத்தக்கூடும் என்றனர். 39 விழுக்காட்டினர் விருப்பமில்லை எனத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரர்களில் 44 விழுக்காட்டினர் அரசாங்க ஆதரவிலான துணைதேடும் சேவைகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் 61 விழுக்காட்டினர் துணைதேடுவது தனிப்பட்ட விவகாரம் என்று கருதினர். 56 விழுக்காட்டினர் அரசாங்கம் வாழ்க்கைச் செலவினம் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
போலி சுயவிவரங்களைத் தவிர்க்க அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படுவது (42%), ஒத்த எண்ணங்கள், வாழ்க்கை முறையின் அடிப்படையிலான தேர்வு (35%), வலுவான தனிமனிதர் தரவுப் பாதுகாப்பு (26%) ஆகியவை அரசுத் தளங்களை நாடுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன.
கவ்டெக் (GovTech) உருவாக்கியுள்ள ‘ஃபர்ஸ்ட்டேட்’ தளம், தற்போது அரசு ஊழியர்களிடையே முன்னோடித் திட்டமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
தனித்துவத்தை விரும்புவது (50%), பொருத்தமான துணை கிடைக்காதது (42%) ஆகியவை தனித்திருப்பதற்கான முக்கியக் காரணங்களாகச் சுட்டப்பட்டன. ‘ஜென் ஸி’ பிரிவினரில் 57 விழுக்காட்டினர் தொழில் வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை ஆகியவற்றை முதன்மையாகக் கருதுகின்றனர்.
சிங்கப்பூரர்களின் அணுகுமுறை தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பொருத்தமான துணையைத் தேடுவதற்கும் இடையே உள்ள சமநிலையைப் பிரதிபலிக்கிறது என்று யூகவ் பொது மேலாளர் சீ வெய் தியோ குறிப்பிட்டார். கடந்த அக்டோபரில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,112 சிங்கப்பூரர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
