ஆயுள் முழுவதும் தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானுக்கு அலகுக் காவடி எடுப்பதாக உளமுருகக் கூறுகிறார் 39 வயது தச்சனா முராரி பாலகிருஷ்ணன்.
எட்டு வயது முதல் தைப்பூச ஊர்வலத்தில் காவடி சுமந்த திரு தச்சனாவின் தந்தை கடந்த ஆண்டு மறைந்ததால், இம்முறை அந்த வேண்டுதல் நிறைவேற்ற இயலாமல் போயிற்று.
இருந்தபோதும், இறை இன்பத்தில் இன்றும் திளைத்தவாறு அவர் அலகுக் காவடி எடுத்த அனுபவத்தைப் பலருடன் பகிர்ந்துகொண்டார்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் சனிக்கிழமை (ஜனவரி 31) காலை கூடியிருந்தோரிடம் தைப்பூசம், அலகுக் காவடி உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் விளக்கமளித்தார்.
“அலகு குத்துவது வலிக்குமா?”, “காவடி எடுப்போர் ஊர்வலத்தை வெற்றிகரமாக முடிப்பார்களா?” என்பது போன்ற ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெறும் அரிய வாய்ப்பினைப் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.
காவடி சுமந்து அதனைக் கோயிலுக்குக் கொண்டுபோகும் வரையில் தேவைப்படும் திட்டமிடுதலையும், பிறர் தந்த ஆதரவையும் விரிவாகக் கூறி தமது அனுபவங்களை அவர்களிடம் விளக்கினார்.
மயில் இறகுகளும் தேரின் மேற்பகுதி போன்ற மகுடமும் கொண்ட இவரது காவடி, இம்முறை ஊர்வலமாக செல்வதற்குப் பதிலாக இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,500 இறகுகளைக் கொண்டுள்ள திரு தச்சனாவின் அந்தக் காவடியைப் பற்றிப் பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.
திரு தச்சனாவின் பூசை அறையை வழக்கமாக அலங்கரிக்கும் இந்தக் காவடி, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை, இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்படும். காவடியுடன் செட்டி மலாக்கா சமூகத்தினரின் படையல் ஒன்றின் மாதிரியும் வைக்கப்பட்டிருந்தது. “மற்ற தமிழர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் அவல், பொரி, கடலை போன்றவை இல்லாமல் பழங்கள், பூக்கள், வெற்றிலை எனத் தங்கள் படையல் சற்று எளிமையாக இருக்கும்,” என்றும் அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
செட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தில் தாத்தா முதற்கொண்டு மூன்றாவது தலைமுறையாக அலகுக் காவடி சுமப்பது வழக்கம். இருந்தபோதும், தமக்கு ஒரு சமயத்தில் ஏற்பட்ட இறையுணர்வால் காவடி எடுப்பதாகத் திரு தச்சனா கூறினார்.
திரு தச்சனாவின் பகிர்வுரை உருக்கமாகவும் உண்மைத்தன்மையுடனும் இருந்ததாகச் சிங்கப்பூருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்த, ஓய்வுபெற்ற செய்தியாளரான 60 வயது மதிக்கத்தக்க சுனிதா ஆபிரகாம் குறிப்பிட்டார்.
“தைப்பூசத்தை நான் ஓரிருமுறை நேரில் பார்த்திருந்தாலும் அலகுக் காவடி எடுத்தவருடன் நேரில் பேசும் வாய்ப்புக் கிட்டவில்லை. எனவே இந்திய மரபுடைமை நிலையத்தின் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்வியுற்றதும் கலந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். இறைபக்தியுடன் சோர்வு, வலி, உறுதி போன்ற மனித உணர்வுகளும் காவடி சுமப்போரின் மனத்தில் இழையோடி இருப்பதைத் திரு தச்சனா உணர்த்தினார். அவரது உண்மையான பகிர்வால் பக்தி மேலும் வெளிப்படுவதாக நான் கருதுகிறேன்,” என்று திருவாட்டி சுனிதா கூறினார்.
பிறருக்குக் காவடி குறித்த விளக்கங்களை எடுத்துக்கூறும் வாய்ப்பினைப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய திரு தச்சனா, பண்பாட்டுப் பன்முகத்தன்மை கொண்டுள்ள சிங்கப்பூரில் இத்தகைய பகிர்வுகளுக்கு மக்கள் வருவது நல்லது எனக் கருதுகிறார்.
இம்முறை காவடி சுமக்கும் நண்பருக்கு ஆதரவாக இருக்கப்போகும் திரு தச்சனா, ஊர்வலத்தில் நடந்து வேண்டுதல் செலுத்தும் அனைத்துப் பக்தர்களுக்கும் முருகனின் அருள் கிட்டவேண்டி பிரார்த்திப்பதாகக் கூறுகிறார்.

