மண்டாய் கோல்ஃப் மைதானத்துக்கு ஓராண்டு குத்தகை நீட்டிப்பு

மண்டாய் கோல்ஃப் மைதானத்துக்கு ஓராண்டு குத்தகை நீட்டிப்பு

படம்: எஸ்பிஎச்

10 Nov 2026 - 8:59 pm

2 mins read

வெற்றிகரமாக மேல்முறையீடு செய்த காரணத்தால் ‘மண்டாய் எக்சிகியூட்டிவ் கோல்ஃப்’ மைதானத்துக்கு ஓராண்டு நிலக்குத்தகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் மூடப்படவேண்டிய அம்மைதானம் அடுத்த ஆண்டுவரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள குத்தகையின் வழியாக அதன் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அந்த நிறுவனத்துக்கு அவகாசம் கிடைக்கும் என்று சட்ட அமைச்சும் சிங்கப்பூர் நில ஆணையமும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) கூட்டாக அறிவித்தன.

அந்த மைதான நிறுவனத்துக்கு வழங்கப்படும் இரண்டாம் குத்தகை நீட்டிப்பு இதுவாகும். அப்பர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள மைதான நிலத்தில், வெளிப்புறச் சாகக் கல்வி நிலையம் அமைக்கும் மேம்பாட்டு திட்ட காலவரையறைகளைக் குத்தகை நீட்டிப்பு பாதிக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாகச கல்வி நிலையத் திட்டம், கல்வி அமைச்சின் வெளிப்புற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு வழங்கும் இலக்கின் அம்சமாகும். மண்டாய் கோல்ஃப் மைதான நிலப்பகுதி, 2032ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படவுள்ள புதிய மூன்று கல்வி அமைச்சின் முகாம்களுக்கான இடங்களில் ஒன்று.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 1993ல் திறக்கப்பட்ட மண்டாய் கோல்ஃப் மைதானம் 13 ஹெக்டர் பரப்பளவுடன் ஒன்பது குழிகளைக் கொண்டது.

சட்ட அமைச்சு, 2025ல் வெளியிட்ட அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை முன்வைத்து, மண்டாய் மைதானம் உட்பட நான்கு கோல்ஃப் மைதானங்களின் குத்தகைகள் புதுப்பிக்கப்படாது என்று தெரிவித்திருந்தது.

அந்த மூன்றில் ‘வாரன் கோல்ஃப் அன்ட் கன்ட்ரி கிளப்’, ‘ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்’, ‘தானா மேரா கன்ட்ரி கிளப்ஸ் கார்டன் கோர்ஸ்’ ஆகியவை அடங்கும். அவற்றின் குத்தகைகள் 2035ஆம் ஆண்டில் காலாவதியாகின்றன.

குறிப்புச் சொற்கள்