முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்குக்காக புதன்கிழமை (ஜூலை 23) நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சொத்து மேம்பாட்டாளரான 79 வயது ஓங் பெங் செங்கின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் அடுத்த வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அட்டவணை மாற்றங்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்க அல்லது தொகுக்க தரப்பினருக்கு அதிக நேரம் தேவைப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் மாற்றப்படலாம்.
குற்ற ஒப்புதல் குறித்த ஓங்கின் வழக்கு “பின்னர் ஒரு தேதிக்கு மாற்றப்படும்” என்று முன்னதாக, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியது.
தொடக்கத்தில் ஜூலை 3ஆம் தேதி திரு ஓங் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு, வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டது.
ஹோட்டல் ப்ராபர்டிஸ் லிமிடெட்டின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஓங், 2008 ஆம் ஆண்டில் ஃபார்முலா 1 இரவு நேரப் பந்தயத்தை சிங்கப்பூர் கொண்டு வந்ததில் பரவலாக அறியப்படுபவர்.
திரு ஓங் பெங் செங் மீது, பொதுச் சேவை ஊழியர் பரிசுப் பொருள் பெற உதவியது, சட்டம் தன் கடமையைச் செய்வதில் இடையூறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிரிவு 165-இன்கீழ் குற்றம் சாட்டப்படுவோருக்கு ஈராண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அக்குற்றத்தைப் புரிய உதவி செய்வோர், அல்லது துணை புரிவோருக்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.
நீதித் துறை தனது கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.