தொண்டூழியர்கள் இல்லாமல் சிறப்பாகச் செயலாற்றுவது இயலாது என்று கூறியுள்ளார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
இதனால், தொண்டூழியர்களை அதிகளவில் சேர்த்திட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் அவர்.
ஜூலை 14ம் தேதி செந்தோசாவிலுள்ள பலவான் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நற்பணி சமூகக் குதூகலம் 2024’ எனும் சமூக குடும்பக் கேளிக்கை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ஓங் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் கழகமும் நற்பணிப் பேரவையும் ஏற்பாடு செய்திருந்த இந்த வருடாந்தர நற்பணி சமூகக் கேளிக்கை விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஓங், “புதிய தலைமுறை நம்மிடையே உள்ளது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். நமது இளையர்களில் பெரும்பாலானோர் சமுதாயத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்வதை விரும்புகின்றனர். மற்றவர்களுக்கு உதவிடும் நோக்கில் அந்த நற்செயல்களை ஆற்றுவதில் அவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.
“எனவே, அவர்களை ஈர்க்கும் விதமான பணிகளை மேற்கொண்டால், அவர்கள் பங்கேற்க விரும்பும் வகையில் நிகழ்வுகளை நடத்தினால், இன்னும் அதிகளவில் இளம் தொண்டூழியர்களைப் பெறலாம்,” என்று விழாவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரிடம் கோரிக்கை விடுத்தார் அமைச்சர் ஓங்.
பெரியோர் முதல் சிறார் வரை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற இந்த ஆண்டிற்கான நற்பணி சமூகக் கேளிக்கை விழாவில் சமூகப் பங்காளிகள், அடித்தளத் தலைவர்கள் உள்ளிட்ட 4,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஓங், சுகாதாரத்தில் அரசு ஏராளமான முதலீடுகளைச் செய்து வரும் வேளையில், சுகாதாரம் சார்ந்த ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொண்டூழியர்களைத் திரட்டுவதைத் தொடர்ந்து முயல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒருங்கிணைந்த நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூகத்தில் குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை மேம்படுத்திடும் இலக்கோடு நடந்தேறியது சமூகக் குடும்ப கேளிக்கை விழா. காலை ஒன்பது மணியளவில் துவங்கிய இந்தப் கேளிக்கை விழா, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், உணவு உபசரிப்பு, பரிசு வழங்குதல் என மாலை நான்கு மணி வரை நீடித்தது.


