கிழக்காசியா முழுவதும் பன்னாட்டுக் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், இணையம்வழி சிறார் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 326 பேர் கைது செய்யப்பட்டனர். 119 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களிடமிருந்து 116 கணினிகள், 340 கைப்பேசிகள், 140 தரவுச் சேமிப்புக் கருவிகள் உள்ளிட்டவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிறார் பாலியல் துன்புறுத்தல், ஆபாசப் படங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புருணை, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றின் காவல்துறையினர், மார்ச் 23 முதல் ஒருமாதகாலத்திற்குச் சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் 382 இடங்களில் சோதனையிட்டனர்.
குற்றச்செயல்கள் மின்னிலக்கத் தளங்களிலும் எல்லை தாண்டிய நிதிவழிகள் மூலமும் இடம்பெறுவதாகக் கருதப்பட்டதால் நிதி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அணுக்கமாக ஒத்துழைத்துச் சிங்கப்பூர்க் காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டோர், விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டோரில் 430 பேர் ஆண்கள். 15 பேர் பெண்கள். அவர்கள் அனைவரும் 12 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் 11 ஆண்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களின் வயது 22க்கும் 44க்கும் இடைப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. சிங்கப்பூரில் மேலும் 16 பேர் விசாரணையில் உதவி வருகின்றனர்.
மலேசியாவில் ஒருவர் ஆபாசப் படங்களைச் சிங்கப்பூரில் இருவருக்கு விற்பதை மலேசியக் காவல்துறை கண்டுபிடித்தது. மலேசிய அதிகாரிகள் தந்த தகவலின் அடிப்படையில் சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறார் இருவரை இணையத்தின் வழியாக வெளிநாட்டுக் குற்றவாளி ஒருவர் பாலியல் சுரண்டல் செய்ததாகக் கூறப்பட்டது. அரசு சாரா அமைப்பின் தகவலின்படி சிங்கப்பூர்க் காவல்துறையினரும் வெளிநாட்டுச் சட்ட அமலாக்கத் துறையினரும் இணைந்து அந்த நபரை அடையாளம் கண்டு, மார்ச் 27ஆம் தேதி அவரைக் கைது செய்தனர்.

