சிங்கப்பூரில் 10ல் ஒரு கனரக வாகனத்தில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி (speed limiter) பொருத்தப்பட்டிருக்கிறது.
ஒரு வாகனம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டாமல் இருப்பதை உறுதிசெய்யும் அக்கருவி சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கானது.
மொத்தம் 2,600 கனரக வாகனங்களில் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படவேண்டும். அவற்றில் இதுவரை 231 வாகனங்களில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் காவல்துறை புதன்கிழமை (ஜூன் 11) தெரிவித்தது.
புதிய விதிமுறையை வலியுறுத்த காவல்துறை, லாரி ஓட்டுநர்களைக் குறிவைத்து திங்கட்கிழமை (ஜூன் 9) முதல் இரண்டு நாள் சோதனை நடத்தியது.
“அந்நடவடிக்கையின்போது புதிய வேகக் கட்டுப்பாட்டு விதிமுறை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள், லாரி ஓட்டுநர்களைத் தொடர்புகொண்டனர்.
“வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தித்தரும் அனுமதி பெற்றுள்ள முகவர்களைத் தொடர்புகொள்வது குறித்து மேல்விவரங்களைப் பெற, சிங்கப்பூர் காவல் படை இணையத்தளத்துக்கு அனுப்பும் கியூஆர் குறியீடு அவர்களிடம் கொடுக்கப்பட்டது; இதைத் தங்கள் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு சில ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது,” என்று காவல்துறை தெரிவித்தது.
ஏற்றப்பட்ட சரக்கு, பொருள்களையும் சேர்க்கும்போது 3,501லிருந்து 12,000 கிலோகிராமுக்கு இடைப்பட்ட எடைகொண்ட கனரக வாகனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்திவருகின்றன. அக்கருவியைப் பொருத்த வாகன உரிமையாளர்களுக்கு இரண்டிலிருந்து மூவாண்டுகள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தகுதிபெறும் கிட்டத்தட்ட 17,000 லாரிகளில் 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி கட்டாயமாகப் பொருத்தவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, இங்கு இறக்குமதியாகும் அதே அளவு எடைகொண்ட லாரிகள் அனைத்திலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படவேண்டும். அப்போதுதான் அவற்றை சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
இன்னும் தகுந்த நடவடிக்கையை எடுக்காத நிறுவனங்கள், அவ்வாறு செய்வதற்கான நெருக்குதலை எதிர்கொண்டுவருவதாக சிங்கப்பூர் தளவாடச் சங்கத்தின் தலைவர் டேவ் இங் குறிப்பிட்டார்.

