சமூக மன்றங்களிலும் தானியக்க இயந்திரங்கள் மூலமாகவும் தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு விநியோகிக்கப்படும் புகைமூட்டப் பாதுகாப்புக்கான முகக்கவசங்களை 22 விழுக்காட்டினரே இதுவரை பெற்றுக்கொண்டுள்ளதாகப் புகைமூட்டப் பணிக்குழு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (அக்டோபர் 22) இத்தகவல் வெளியானது.
அரசாங்கம் கடந்த புதன்கிழமையிலிருந்து (அக்டோபர் 14) மக்கள் கழகம், சமூக மன்றங்கள், தானியக்க இயந்திரங்கள் வழியாக இலவச முகக்கவசங்களை வழங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்கள், சிறப்புத் தேவையுடையோர் நேரடியாகச் சென்று முகக்கவசங்களைப் பெற இயலாத நிலையில் இருக்கக்கூடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார். அத்தகையோர்க்கு உதவ முன்வருமாறு தொண்டூழியர்கள், அண்டை வீட்டினர், வணிகர்கள் போன்ற தரப்பினரிடம் அமைச்சர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
சிரமப்படுவோர்க்கு உதவ நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை ஆற்றலாம் என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) முதல், ஒரு மணி நேரத்துக்கான காற்றுத்தரக் குறியீடு (பிஎம்2.5) இயல்பு நிலையில் உள்ளது. இருப்பினும், தெற்குக் கலிமந்தான் பகுதியில் வறண்ட வானிலை நிலவுவதால், புகைமூட்டம் திரும்பக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
சமூக மன்றங்கள், தானியக்க இயந்திரங்களில் முகக்கவசங்கள் குறைவாகப் பெறப்பட்ட போதிலும், சில சில்லறை விற்பனைக் கடைகளில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
சில்லறை விற்பனையாளர்களுக்குக் கையிருப்பை வழங்கச் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக விளக்கிய அவர், ஃபேர்பிரைஸ் குழுமத்திடம் இன்னமும் இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
“ஷெங் சியோங், ஜெயன்ட், கோல்ட் ஸ்டோரேஜ் ஆகிய கடைகளில் கையிருப்புகளை நிரப்ப உதவிவருகிறோம். எனவே பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. முகக்கவசங்களைக் கடைகளில் மீண்டும் நிரப்புவதற்குச் சற்று அவகாசம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
