தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ விலங்கியல் பூங்கா திறப்பு

3 mins read
277a6e04-d8d3-4b2b-8fef-f4d1c748ddb8
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ விலங்கியல் பூங்கா புதன்கிழமை (மார்ச் 12) திறக்‌கப்பட்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்காவான ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ புதன்கிழமை (மார்ச் 12) திறக்‌கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு நடைபெற்ற பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.

பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) கலந்துகொண்டார்.
பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெற்காசிய மழைக்காடுகளின் வளமான பல்லுயிர்ச் சூழலைப் பார்வையாளர்களுடன் இணைக்கும் இந்தப் பூங்காவின் புதுமையான முயற்சிகளை அமைச்சர் தமது உரையில் பாராட்டினார்.

இந்தப் பூங்காவில் வாழும் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான உயிரினங்கள், அழியும் அபாயத்திலுள்ள இனங்களைச் சேர்ந்தவை என்பதை திருவாட்டி ஃபூ சுட்டினார்.

வனவிலங்குகளை மிக அருகில் கண்டுகளிக்‌க வசதிகள் அமைக்கப்பட்டதோடு அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகளும் இந்தப் பூங்காவில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதைப் பறைசாற்றும் விதமாக, அருகிவரும் உயிரினமான பிலிப்பீன்ஸ் புள்ளிமான் கன்றுக்குட்டி ஒன்று, இனப்பெருக்கத்தின்வழி பிப்ரவரி 16ஆம் தேதி இந்தப் பூங்காவில் பிறந்தது.

அருகிவரும் உயிரினமான பிலிப்பீன்ஸ் புள்ளிமான் கன்றுக்குட்டி ஒன்று இந்தப் பூங்காவில் கடந்த மாதம் பிறந்தது.
அருகிவரும் உயிரினமான பிலிப்பீன்ஸ் புள்ளிமான் கன்றுக்குட்டி ஒன்று இந்தப் பூங்காவில் கடந்த மாதம் பிறந்தது. - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

இதை ஒரு முக்கியத் தருணமாக குறிப்பிட்ட அமைச்சர், அந்தக் கன்றுக்குட்டியின் பிறப்பு மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக அமைவதாகச் சொன்னார்.

“அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் நாம் செயல்பட்டால் வனவிலங்குகளின் அழிவைத் தடுக்க முடியும் எனும் நம்பிக்கையை இந்த நிகழ்வு ஏற்படுத்துகிறது,” என்றார் திருவாட்டி ஃபூ.

பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான கிரேஸ் ஃபூ (நடுவில்) கலந்துகொண்டார்.
பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான கிரேஸ் ஃபூ (நடுவில்) கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

மேலும், இயற்கையான குளிரூட்டல் முறை (passive cooling), பாதுகாக்கப்பட்ட மரக்கூட்டங்கள், தேனீக்களை ஈர்க்கும் தாவரங்கள் உள்ளிட்ட உள்ளூர் சுற்றுச்சூழலை வலுப்படுத்தும் பூங்காவின் நிலைத்தன்மையான வடிவமைப்பை அவர் பாராட்டினார்.

தனிப்பட்ட சாகச அடிப்படையிலான விலங்கியல் அனுபவத்தை ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ வழங்குகிறது என்றார் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் பார்க்ளே.

“மர உச்சிகளிலிருந்து சரவாக்கின் ‘மூலு’ குகைகளைப் போன்று வடிவமைக்கப்பட்ட நிலத்தடி குகைகள் வரை மழைக்காட்டின் வெவ்வேறு அங்கங்களை எடுத்துக்காட்டும் மண்டலங்களை பார்வையாளர்கள் இங்கு சுற்றிப்பார்க்‌கலாம்,” என்றார் அவர்.

இந்தப் பூங்காவின் முதல் ஆண்டில் ஏறத்தாழ 900,000 பேர் வருகையளிப்பார்கள் என்று எதிர்பார்க்‌கப்படுவதாக அவர் சொன்னார்.

இதற்கு அடுத்த கட்டமாக ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைச் சித்திரிக்கும் ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆப்பிரிக்கா’ அடுத்த ஆண்டு திறக்‌கப்படவுள்ளதாக திரு மைக் தெரிவித்தார்.

இத்துடன், இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு வெளியே ‘எக்‌ஸ்ப்லோரியா’, ‘கியூரியோசிட்டி கோவ்’ என்ற பெயரைக் கொண்ட இரண்டு புதிய உட்புற சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படவுள்ளன என்றார் அவர்.

ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ள ‘மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பன்யன் ட்ரீ’ விடுதியில் மொத்தம் 338 அறைகள் உள்ளன.

ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ள ‘மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பன்யன் ட்ரீ’ விடுதி.
ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ள ‘மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பன்யன் ட்ரீ’ விடுதி. - படம்: மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பன்யன் ட்ரீ

இது, சிங்கப்பூரர்களையும் சுற்றுப்பயணிகளையும் பல நாள்கள் தங்கி அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களைச் சுற்றிப்பார்க்‌க ஊக்குவிக்கும் என தாங்கள் நம்புவதாக திரு மைக் கூறினார்.

‘ஃபெய் யுவெ’ சமூகச் சேவை அமைப்பை சேர்ந்த 15 முதல் 83 வயது வரை உட்பட்ட 66 பயனாளர்களும் துவக்க விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

அவர்களில் ஒருவரான திரு சுப்ரமோனி, 76, இந்தப் பூங்காவைப் பற்றி செய்தியில் படித்ததாகவும் அதை நேரில் கண்டபோது தாம் எதிர்ப்பார்த்ததைவிட மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததாகவும் சொன்னார்.

‘ஃபெய் யுவெ’ சமூகச் சேவை அமைப்பை சேர்ந்த திரு சுப்ரமோனி, 76.
‘ஃபெய் யுவெ’ சமூகச் சேவை அமைப்பை சேர்ந்த திரு சுப்ரமோனி, 76. - படம்: யோகிதா அன்புச்செழியன்

“விதவிதமான விலங்குகளை இங்கு மிக அருகில் காண முடிவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயற்கையுடன் ஒன்றாக இருப்பதுபோல் உணர்கிறேன்,” என்றார் அவர்.

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’, தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். கடைசி நுழைவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

குறிப்புச் சொற்கள்