தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்: சிங்கப்பூரர்கள் இருவர் மீது நடவடிக்கை, வெளிநாட்டவர் ஒருவர் கைது

4 mins read
சிங்கப்பூரர்கள் இருவருக்கும் முறையே தடுப்புக் காவல் உத்தரவும் கட்டுப்பாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன
d12c586c-bd75-4546-bb69-dee17d4158f4
(இடது) லீ தன் முழங்கையில் பச்சை குத்திக்கொண்ட குறியீடு. முழங்கை மூட்டில் வலியைக் குறைத்துக்கொள்ள உள்வட்டம் முழுவதும் கறுப்பாக்கப்படவில்லை. (வலம்) இணையத்தில் தானே வடிவமைத்து லீ வாங்கிய டி-சட்டைகள். - படங்கள்: உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதத்திலும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும், தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சிங்கப்பூரர்கள் இருவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிப்ரவரி 10ஆம் தேதி தெரிவித்துள்ளது.

நிக் லீ சிங் சியூ எனும் 18 வயது மாணவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவும் இல்லத்தரசியான 56 வயது ஹமிஸா ஹம்ஸாவிற்குக் கட்டுப்பாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வன்முறையுடன் கூடிய வலசாரித் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட லீ, சிங்கப்பூரில் உள்ள மலாய் இனத்தவர் மீதும் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையிலான சர்ச்சையால் தூண்டப்பட்ட ஹமிஸா தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

மேலும், ‘ஆக்சிஸ் ஆஃப் ரெசிஸ்டென்ஸ்’ (AOR) எனும் இஸ்லாமியப் போராளி, பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புக்கு ஹமிஸா ஆதரவு தெரிவித்தார். ஹமாஸ், இஸ் அட்-தின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் (AQB), ஹிஸ்புல்லா, ஹூதி போன்ற அமைப்புகள் அந்தக் கட்டமைப்பில் உள்ளன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சஹாருதீன் சாரி எனும் 34 வயது மலேசியர் கைது செய்யப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார்.

அவர் ஈராக்கிலும் சிரியாவிலும் செயல்படும் ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ், ‘ஏகியூபி’ ஆகியவற்றை ஆதரித்தார். சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பகுதிகளான சிரியா, காஸா போன்றவற்றுக்குச் சென்று ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்தார்.

மாணவர் லீ, 2023ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்த்துக்கொண்டார். சமூக ஊடகங்களில் அவர் காண நேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும் தீவிர வலசாரிக் கருத்துகளும் அதற்குக் காரணம்.

அப்போது முதல் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டு இத்தகைய இணையப் பதிவுகளை அவர் படித்தார்.

2019ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நேரலை செய்யப்பட்ட காணொளியை 2023 ஜூன் மாதத்தில் பலமுறை அவர் பார்த்தார்.

அந்தத் தாக்குதலை மேற்கொண்ட பிரென்டன் டாரன்ட் என்பவரை முன்மாதிரியாகக் கொண்டு பாவனையான இணைய விளையாட்டு ஒன்றைப் பதிவிறக்கம் செய்து, அதை மாற்றியமைத்தார். பின்னர், அதில் டாரன்ட்டின் பாகத்தை ஏற்று கிறைஸ்ட்சர்ச்சின் அல்-நூர் பள்ளிவாசலில் முஸ்லிம்களைத் தானே கொல்வதுபோலப் பயிற்சி செய்தார்.

2024ஆம் ஆண்டில் மலாய்க்காரர்கள், முஸ்லிம்கள் மட்டுமன்றி யூதர்கள், மெக்சிகோ நாட்டவர், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், இந்தியர்கள் போன்ற, வலசாரித் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படும் இதர பிரிவினர் மீதும் வெறுப்பை வளர்த்துக்கொண்டார் லீ. அவர்களைக் கொல்வது நியாயம் என்றும் சீன, கொரிய, ஜப்பானிய இனத்தவர்கள் மட்டுமே மேலானவர்கள் என்றும் நம்பினார்.

2024 செப்டம்பரில் தீவிர வலசாரிச் சமூகத்துக்கான கடப்பாட்டைக் காட்டும் வகையில் தன் வலது முழங்கையில் ‘சனென்ராட்’ எனப்படும் கறுப்புச் சூரியனையும் அதைச் சுற்றியுள்ள சக்கரத்தையும் பச்சை குத்திக்கொண்டார்.

இது, கிறைஸ்ட்சர்ச் தாக்குதலின்போது டாரன்ட் பயன்படுத்திய குறியீடாகும்.

மேலும், இந்தக் குறியீட்டையும் மண்டை ஓட்டுக் குறியீட்டையும் பொறித்த டி-சட்டைகளையும் இணையம் மூலம் வடிவமைத்து, வாங்கினார்.

சிங்கப்பூரில் தன்னைப் போன்ற சிந்தனையுடையவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார். நாட்டுத் துப்பாக்கிகள், கத்திகள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் திட்டமிட்டார்.

லீயின் குடும்பத்தினர், ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள் யாருக்கும் இவரது இந்த மனநிலை குறித்துத் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தனது கருத்துகளைத் திணிக்கவும் அவர் முயலவில்லை என்று கூறப்பட்டது.

ஹமிஸா, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார்.

இணையம் வாயிலாகப் பாலஸ்தீனர்களின் துன்பங்களைக் குறித்த கருத்துகளைப் படித்தார். ‘ஏஓஆர்’ அமைப்பின் வன்செயல்களுக்கு சமூக ஊடகக் குழுக்களில் ஆதரவு தெரிவித்தார்.

இஸ்ரேல் மீதும் அதன் பாதுகாப்புப் படையினர் மீதும் வெறுப்பை வளர்த்துக்கொண்டார். பாலஸ்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவர்களைத் துடைத்தொழிக்க வேண்டும் என்று நம்பினார்.

தன்னால் இஸ்ரேல்-ஹமாஸ் சர்ச்சையில் ஆயுதமேந்திப் போரிட முடியாது என்று கருதியதால் ‘ஏஓஆர்’ அமைப்பின் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அவற்றில் வன்செயலைத் தூண்டும் கருத்துகளும் அடங்கும்.

சமூக ஊடகக் கணக்குகள் அதற்காகத் தடை செய்யப்பட்டபோது மீண்டும் மீண்டும் புதிய கணக்குகளை ஹமிஸா தொடங்கினார். தனிப்பட்ட முறையில் அவர் நிர்வகிக்கும் சில சமூக ஊடகக் குழுக்களில் 16 முதல் 1,000 பேர் வரை உறுப்பினர்களாக இருந்தது தெரியவந்தது.

அவர் சிங்கப்பூரிலோ வெளிநாடுகளிலோ தாக்குதல் நடத்தவோ வன்செயலில் ஈடுபடவோ திட்டமிடவில்லை. அவரது நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கவில்லை.

சிங்கப்பூரில் துப்புரவாளராகப் பணிபுரிந்த சஹாருதீன் 2014ஆம் ஆண்டு முதல் தீவிரவாதச் சித்தாந்தப் பாதையில் செல்லத் தொடங்கினார்.

சிரியா சர்ச்சையில் ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் தொடர்பு குறித்த தகவல்களை இணையம் வழி தெரிந்துகொண்டார்.

ஊழிக் காலத்தில் முஸ்லிம்களைத் தற்காக்கும் படை என்று அந்த அமைப்பை நம்பிய அவர் அதன் தீவிர ஆதரவாளரானார்.

முஸ்லிம்களுக்கு எதிரான போரில் ஆயுதமேந்தி உயிர் துறப்பதைப் பெருமையாகக் கருதினார்.

2023ல் ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஹமாசுக்கும் ‘ஏகியூபி’ அமைப்புக்கும் ஆதரவு தெரிவித்தார். இஸ்‌ரேல்-பாலஸ்தீன் பிரச்சினையை ஊழிக்காலம் என்று குறிப்பிட்ட அவர், காஸா சென்று போரிடத் திட்டமிட்டார்.

அவர் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்தவோ வன்செயல்களில் ஈடுபடவோ திட்டமிடவில்லை. இங்கு யார் மீதும் தீவிரவாதக் கருத்துகளைத் திணிக்கவில்லை.

இச்சம்பவங்கள் சிங்கப்பூர் தொடர்ந்து பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குவதைக் குறிப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது. அதிலும் சுயமாக தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்படுவோரை அது குறிப்பிட்டது.

இத்தகையோர் வெவ்வேறு பின்னணிகளைச் சார்ந்திருப்பதையும், வயது, பாலினம், இனம், சமயம், குடியுரிமை தொடர்பான பாகுபாடின்றி அவர்கள் இந்தப் போக்கின்பால் ஈர்க்கப்படுவதையும் அது சுட்டியது.

சிங்கப்பூரில் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதத்துக்கான அனைத்துவித ஆதரவையும் அரசாங்கம் கடுமையாகக் கருதும் என்றும் அதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்